கால்டுவெல்லும் என் மனக்குறையும்….
நண்பர்களே…
நேற்றைய (28.08.18) இந்து தமிழில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “கால்டுவெல் ஓர் எதிர்வினை” என்ற கட்டுரை வந்துள்ளது. அதில் “கால்டுவெல் மறைந்த 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான மூன்றாம் பதிப்பின் (1913) மறுஅச்சாகும். இவை, இம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், கால்டுவெல் காலத்திலேயே வெளியான இரண்டாம் பதிப்பை (1875) கவிதாசரண் 2008 ல் முழுவதுமாகப் பதிப்பித்தார்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட பகுதி எப்படி வெளிவந்தது என்ற தகவல் இல்லை.
1913 இல் வெளிவந்த “கால்டுவெல்லின் ஒப்பிலக்கண” நூலில் நீக்கப்பட்டிருந்த பகுதிகளைக் கண்டறிந்து நான் கவிதாசரணில் ஒரு கட்டுரை எழுதினேன். பின்னர் 1875 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்புத்தான் முழுமையானது. ஆனால் அந்நூல் தமிழ்நாட்டில் எங்கும் எளிதாகக் கிடைக்கவில்லை. அந்த நூல் பேராசிரியர் தேவசகாய குமாரிடம் இருப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் சொன்ன தகவலின் அடிப்படையில்
தேவசகாயகுமார் அவர்களை தொடர்பு கொண்டு ஒரு கட்டுரையை கவிதாசரணுக்கு எழுதி தருமாறு வேண்டினேன். அவரும் கொடுத்தார். பின்னர் அந்நூலை நான் பார்க்க முடியுமா என்று பேராசிரியர் தேவசகாயகுமாரிடம் கேட்டேன். அவர் தன்னிடம் பிரதி இல்லை என்றும் ஏதோ ஒரு நூலகத்தில் பார்த்தாகவும் கூறினார்.
தேவசகாயகுமார் அவர்களை தொடர்பு கொண்டு ஒரு கட்டுரையை கவிதாசரணுக்கு எழுதி தருமாறு வேண்டினேன். அவரும் கொடுத்தார். பின்னர் அந்நூலை நான் பார்க்க முடியுமா என்று பேராசிரியர் தேவசகாயகுமாரிடம் கேட்டேன். அவர் தன்னிடம் பிரதி இல்லை என்றும் ஏதோ ஒரு நூலகத்தில் பார்த்தாகவும் கூறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளாகத் தேடியதில் அந்நூலின் பிரதியொன்று சென்னையில் இருப்பதாகக் கூறி என் நண்பர் தியாகராஜனும் அவருடைய மூத்த மருமகன் மோகனும் எனக்கு நூலின் நகலை அனுப்பினார்கள். அந்த நூல் மிகவும் சிதலமடைந்திருந்ததால் அதில் பல பக்கங்கள் இல்லை. எனவே மீண்டும் முழுமையான நூலை தேடி அலைந்தேன். ஒரு நாள் நானும் நண்பர் பெருமாள்முருகனும் நாமக்கல்லில் அரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த மறைந்த பெரியவர் ந.பா.ராமசாமி அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் அந்த நூல் இருந்தது. அவர் பெருந்தன்மையுடன் அந்நூலை நகல் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
அதனைப் படித்து வியப்படைந்த நான் அந்நூலைப் பற்றிய செய்திகளை பேராசிரியர் வீ.அரசுவிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த நூலைத் தானும் படிக்கவேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டார். கையிலிருந்த ஒரே பிரதியை அவரிடம் கொடுத்துவிட்டேன். அன்று தஞ்சை தமிழறிஞர் தட்சிணமூர்த்தி அய்யா அவர்களையும் அரசு வீட்டில் பார்த்தேன். இந்நூலில் இருந்த சுவையான பகுதிகளையும் சென்னைப் பல்கலைக் கழகம் நீக்கிவிட்டு பதிப்பித்த பகுதிகளைப் பற்றி ஆர்வமுடன் பேசிக்கொண்டு இருந்தோம்.
இந்த நூலை முழுமையாகப் படித்துவிட்டு பிறகு தருகிறேன் என்று அரசு கூறிவிட்டார். சில மாதங்கள் கழித்து அரசுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்நூலை மறுஅச்சு போட வேண்டும் என்றார். அதனை கவிதாசரண் செய்வார் என்றார். ஒரு நாள் கவிதாசரண் சென்னைப் பல்கலைக் கழகப் பதிப்பையும் பார்க்க வேண்டும் என்றார். அவரை பல்கலைக் கழகத்திற்கு அழைத்து சென்று அந்த நூலையும் வாங்கினோம்.
கவிதாசரணால் வெளியிடப்பட்ட பின்னர் அந்நூலுக்கு ஒரு வெளியீட்டு விழாவை வீ.அரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு சிபிஐ கட்சி பெரியவர் நல்லகண்ணு அய்யாவை அழைத்திருப்பதாகவும் அவருக்கு இதைப் பற்றிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்கள். அடுத்து வந்த தொலைபேசியில் அய்யா நல்லகண்ணு அவர்கள் என்னிடம் பேசினார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக கால்டுவெல் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் அய்யா அவர்களிடம் கூறினேன். கடைசியில் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன்.
1913 பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் முழுமையானது அல்ல என்பதை முதன்முதலாக கண்டறிந்து, அதைப் பற்றி கவிதாசரணில் கட்டுரை எழுதினேன். இரண்டு ஆண்டுகள் தேடி விடுபட்டுள்ள பகுதிகள் உள்ள 1875 ம் பதிப்பை எடுத்து கொடுத்த என்னை இவர்கள் புறக்கணித்தது என்ன நியாயம்? என்று பெரியவரான நீங்கள் கேட்க வேண்டும் என்றும், இந்த நூலைக் கண்டுபிடித்து வெளியிட்டவர் கவிதாசரண் என்று குறிப்பிட்டுள்ளது நியாயமல்ல என்பதையும் நீங்கள் அவர்களுக்கு அன்புடன் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நிச்சயம் பேசுவேன் என்று என்னிடம் சொல்லியவர் என்ன காரணத்தாலோ அங்கு அவர் அதனை பேசவில்லை.
இப்படியான பல வரலாறுகளை உள்ளடக்கிய 1875 ம் பதிப்பு உங்கள் கையில் எளிமையாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்நூலின் இணைப்பு உங்களுக்கு கொடுத்துள்ளேன். தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே…
போ வேல்சாமி
No comments:
Post a Comment