திருச்சபையில் உண்டியல் கலயம் வந்த வரலாறு
பாளையங்கோட்டையில் திருச்சபை திருத்தொண்டர் கழகக் கூட்டம் நடந்தது.
பேராயர் சார்ஜண்ட் ஐயரவர்கள் ஒரு பொருட்பாடப் போதனை கொடுத்தார்கள்.
பொருள் என்ன தெரியுமா ? ஒரு உண்டியல் பெட்டி , 1854 ஆம் ஆண்டில் சார்ஜண்ட் ஐயரவர்கள் இங்கிலாந்து சென்றிருந்தபோது இந்திய நற்செய்திப் பணிக்காக சர்ச் மிஷன் கூட்டம் நடந்தது. காணிக்கை எடுக்க ஆரம்பித்தபோது ஒரு சிறு பெண் தன் சகோதரனைக் கொண்டு ஓர் உண்டியல் பெட்டி செய்து , அதில் நாளடைவில் சேர்த்த பத்து ஷிலிங் போட்டுக் கூட்டத்தில் கொண்டுவந்து கொடுத்தாள். இந்தியா வரும்பொழுது அந்த உண்டியல் பெட்டியைக் கேட்டு வாங்கி வந்திருந்தார். அந்தப் பெட்டியைக் காட்டி அருளுரை கூறினார்.
அப்பொழுது அங்கு குழுமியிருந்த ஆண்களின் காதுகளிலுள்ள கடுக்கன்கள் ஐயரவர்களின் கண்ணையும் கருத்தையும் உறுத்தின.
பெண் பிள்ளைகள் நகை போட்டுக் கொண்டாலும் , ஆண் பிள்ளைகளுக்கு அது அவசியம் இல்லை என்று பல வகையாய்ப் புத்தி சொன்னேன் என்று சார்ஜண்ட் ஐவரவர்கள் தாமே எழுதுகிறார்கள்.
பிரசங்கம் முடிந்து சார்ஜண்ட் ஐயர் பங்களாவுக்குப் போனார். பிரசங்கம் கேட்டு வெகுவாகக் குத்துண்ட ஒருவர் ஐயவரவர்களைப் பின் தொடர்ந்தார்.
வீட்டினுள் நுழைந்து , துரையவர்களே இந்தக் கடுக்கனை அந்தப் பெட்டியினுள் போடுங்கள் ' என்று சொல்லிக் கழட்டிக் கொடுத்தார்.
இதனைப் பார்த்த - கேட்ட அதிகமான கடுக்கன் ஆசாமிகள் உள்ளே நுழைந்தனர்.
தங்கள் தங்கள் கடுக்கன்களை கழட்டி உண்டியலில் போட்டனர்.
பெட்டி நிரம்பி வழிந்தது . இது குறித்து சார்ஜண்ட் ஐயரவர்கள் , அது அழகுள்ள பெட்டி என்று சொல்லக்கூடாவிட்டாலும் , பிரயோசனமான காரியம் ஒன்று செய்யக் கருவியாயிற்று.
தூர தேசத்திலுள்ள ஒரு சிறு பெண் செய்த காரியத்தைக் கேள்விப்பட்டதினால் பாளையங்கோட்டை சர்ச் மிஷன் சங்கக் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லோருக்கும் எழுப்புதல் உண்டாயிற்று என்று எழுதுகிறார் அப்பொழுது பாளையங்கோட்டை உபதேசியார் வேதநாயகம் சிமியோன் என்பவர்.
அவர் 1828 ஆம் ஆண்டில் இந்து மார்க்கத்தில் பிறந்தவர் .
1837 ஆம் வருடம் மார்ச் மாதம் 25ம் நாளில் அன்பினகரம் தேவாலயத்தில் ரேனியஸ் ஐயரவர்களால் குடும்பத்தோடு திருமுழுக்குப் பெற்றார்.
அதுமுதல் மிஷன் பள்ளியில் கற்றுத் தேறினார். வேத சாஸ்திரப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தார் . 1849 முதல் சுவிசேஷ நற்பணி செய்தார் . இந்நாளில் பாளை , சர்ச் மிஷன் சபைக்கு ஓர் உபதேசியார் தேவையாய் இருந்தது . இவரே தகுதியுள்ளவர் என்று கண்டு , 1853ல் சார்ஜண்ட் அத்தியட்சர் இவரை உபதேசியாராக நியமித்தார் .
1865 வரை 12 வருடங்கள் உண்மையாய் ஊழியம் செய்தார் . அந்த சிமியோன் உபதேசியார் மனதில் அன்று ஓர் எண்ணம் எழுந்தது .
சீமை தேசத்துச் சிறுமி புறதேச சுவிசேஷ நற்பணிக்கு இப்படிச் செய்தால் , பின்தங்கி இருளில் இருக்கிற வட திருநெல்வேலிக்கு நாமும் இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்தார்.
ஒரு குயவரைக் கூட்டிவந்து அந்த உண்டியல் பெட்டியைக் காட்டி , நாற்பது உண்டியல் கலயம் செய்து , சுதேச கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார் .
8 மாதங்கள் கழித்து , கலயச் சங்கம் வைத்தபோது 40 கலயங்களிலிருந்தும் 63 ரூபாய் கிடைத்திருந்தது.
அடுத்தடுத்து ஆறு மாதங்களில் 106 ரூபாயாயிற்று .
கலயம் நிறையத் தேவைப்பட்டது .
பல ஊழியர்களும் உற்சாகமுடன் கலயங்களை வாங்கிச் சென்றனர் .
வட திருநெல்வேலியில் இந்துக்கள் மத்தியில் நற்செய்திப் பணி செய்துவந்த ராக்லாந்து ஐயருக்கு 1858 ஆம் ஆண்டு மே மாதம் வேதநாயகம் சிமியோன் அவர்கள் எழுதின கடிதத்தில் என்னிடம் கலயம் வாங்கியவர்களில் மிகுதியானபேர் கூலிக்காரராயும் , ஏழைக் கைம்பெண்களாயும் , பஞ்சு நூற்று ஜீவனம் பண்ணுகிறவர்களாயும் , பருத்திக்கொட்டை , கோழி , கோழி முட்டை முதலானவைகளை விற்றுக் காணிக்கை சேர்க்கிறவர்களாயும் இருந்தார்கள் என்று எழுதுகிறார்.
இவ்விதமாக திருநெல்வேலித் திருமண்டலத்தில் உண்டியல் கல்யம் முதன் முதலாக வந்த வரலாற்றைக் காண்கிறோம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜தகவல் 1899 செப்டம்பர் நற்போதகம் ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment