திராவிட மொழியியலின் தந்தை , பேராயர் இராபர்ட் கால்டுவெல்
இந்தியாவுக்கு ஆங்கிலேயர் வணிகம் செய்யவந்த காலம்முதல், காலனியாதிக்கம்
நடத்திய காலம் வரை மதப் பணிகளுக்காகவும் சீர்திருத்தப் பணிகளுக்காகவும் வந்துசென்ற ஆயிரக்கணக்கான மேலைநாட்டவருள் இன்றும் நம் நினைவில் எஞ்சுபவர்கள் வெகுசிலரே. அவர்களுள் இராபர்ட் கால்டுவெல் குறிப்பிடத்தகுந்தவர். அவர் பிறந்து இருநூறு ஆண்டுகளாகின்றன. வெறுமனே மதப்பணியாளராக மட்டுமில்லாமல், அவராற்றிய சில சமூகப்பணிகளும், படைப்பூக்கத்துடன் அவர் உருவாக்கிய சில நூல்களுமே அவரை காலங்கடந்து நிற்கச் செய்திருக்கின்றன.
தமிழ் செம்மொழி, தமிழர்கள் திராவிட இனத்தவர் திராவிட மொழிகள் பழம்பெருமை மிக்கவை என தனது ஆய்வுகளின் மூலம் நிறுவியவர்.
பிறப்பும் கல்வியும்
இராபர்ட் கால்டுவெல் பிறப்பால் அயர்லாந்துக்காரர். 1814, மே-7-இல் பெல்பாஸ்ட் என்னுமிடத்துக்கருகில் பிறந்தார். குடும்பம் வறுமை காரணமாக அயர்லாந்தின் கிளாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்தது. குடும்பத் தேவை காரணமாக ஒன்பது வயதிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது. தீவிரமான வாசிப்பார்வத்தால் அவர் தன் அறிவை தானே வளர்த்துக்கொண்டார். பின் டப்ளின் சென்று ஓவியக் கலையில் பயிற்சிபெற்றார். 1834-இல் அவர் தேவாலய பேரவைக் குழுவில் இணைந்து இந்தியாவுக்கு மதபோதகராக செல்வதெனத் தீர்மானித்தார். எனவே அவர் லண்டன் மதப்பிரச்சார கழகம் எனும் அமைப்பில் விண்ணப்பித்தார். அது அவரை மதபோதகராக ஏற்றுக்கொண்டு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சென்று படிக்கும்படி அறிவுறுத்தியது. அங்கேதான் அவர் மொழிகளை ஒப்பீடுசெய்வதில் திறமைமிக்கவரான டேனியல் சான்ஃபோர்டை சந்தித்தார். மேலும் பல்கலைக் கழகத்தில் லத்தீன், கிரேக்க மொழிகளுடன் மத சாத்திரத்தையும் கற்றுத்தெளிந்தார்.
கல்வியில் சிறந்து திகழ்ந்த கால்டுவெல் தனது பல்கலைக்கழக படிப்பை முடித்ததும், எல்.எம்.எஸ். அமைப்பு அவரை மதப் பிரச்சாரகராக நியமனம் செய்து 1838, ஜனவரி 8-இல் சென்னைக்கு அனுப்பியது. சென்னை வந்த கால்டுவெல் தமிழ், தெலுங்கு கற்பதில் ஆர்வம் காட்டினார். சாதாரண மக்களிடையே பணியாற்ற விரும்பியதால் பேச்சுத் தமிழைக் கற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டார். இந்து மதம் குறித்தும் நிறைய வாசித்து அறிந்துகொண்டார். தனது அறிவை விரிவாக்கம் செய்யும் நோக்கில் அன்று சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிற மதப்பிரச்சார அமைப்புகளிலும் அதிலுள்ள போதகர்களிடமும் இணக்கம் காட்டினார்.
எனினும் இக்காலக்கட்டத்தில், கால்டுவெல் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு நெருக்கமாயிருந்த ஆங்கில திருச்சபை பிரிவை அவரது மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் நற்செய்தி பரப்புதல் கழகத்தில் (நடஏ) சென்று சேர்ந்தார். அவ்வமைப்பின் சென்னைக் கிளை அவரை மதபோதகராக ஏற்று திருநெல்வேலியின் இடையன்குடி பகுதிக்கு அனுப்பியது. அவ்வமைப்பு திருநெல்வேலிக்கு சில வருடங்களாக புதிய மதபோதகர் யாரையும் நியமிக்காத காரணத்தால், கால்டுவெல் அப்பகுதியில் முழுவீச்சுடன் செயலாற்ற வேண்டுமென விரும்பியது. இதற்காக தலைமை மதகுருவான ஸ்பென்சரிடம் கால்டுவெல்லை அனுப்பி இங்கிலாந்து தேவாலயத்தின் சித்தாந்தங்களையும் மதபோதகரின் பொறுப்புகளையும் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்தது.
இதன்பின் கால்டுவெல், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு கால்நடையாகவே கிளம்பினார். முதலில் சிதம்பரம் வழியாக தரங்கம்பாடியை வந்தடைந்த அவர், டேனிஸ் ஏசு சபையின் செயல்பாடுகளை நேரில் பார்த்தறிந்தார். பின் இலத்தீன்- தமிழ் அகராதியைத் தொகுத்தளித்த சுவார்த்தை சந்திக்க தஞ்சாவூர் கிளம்பினார். அவருடன் சில மாதங்கள் தங்கியிருந்தபின் நீலகிரி, கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து மதுரையை வந்தடைந்தார். இன்றைக்கு திருமங்கலத்தில் புகழுடன் திகழும் அமெரிக்கன் கல்லூரி உருவாவதற்கான அடிப்படையான பள்ளியை உருவாக்கியவர் திரேசி. அவரையும், சென்னைப் பல்கலைக்கழக அகராதியை உருவாக்கிய சாந்தலர் என்பவரையும் மதுரையில் சந்தித்தபின், 1841-இல் நாசரேத் வந்தடைந்தார் கால்டுவெல்.
சமயப் பணியும் சமூகப் பணியும்
நாசரேத் வந்தடைந்த கால்டுவெல், அங்கிருந்து செம்மண் தேரியான இடையன்குடியை கால்நடையாகவே சென்று பார்வையிட்டார். இடையன் குடியைச் சுற்றியிருந்த கிராமங்களில் கிறித்தவர்கள் பரவலாகக் காணப் பட்டதையும், அங்குள்ள உள்ளூர் மக்கள் படிப்பறி வில்லாதவர்களாக, கடின உழைப்பாளிகளாக, ஏழைகளாக இருப்பதையும் கண்டார். பெரும்பாலோர் பனையேறிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் காணப்பட்டனர்.
அப்பகுதியில் கிராமங்கள் ஒழுங்கின்றிக் காணப்பட்டன. முறையான தெருக்களின்றி, வீடுகள் காற்றோட்டமோ, சுகாதாரமோ இன்றிக் காணப்பட்டன. இதனையெல்லாம் கண்ணுற்ற கால்டுவெல் இடையன்குடியில் ஒரு முன்மாதிரிக் கிராமத்தை உருவாக்கவும், அப்பகுதியில் மாறுதலைக் கொண்டுவரவும் விரும்பினார். ஆனால் கிராமம் கிறித்தவ சபைக்கு சொந்தமாக இல்லாத பட்சத்தில் மாற்றங்களை நடை முறைப்படுத்துவது கடினமென்பதைக் கண்டார். எனவே அப்பகுதியுள்ளோரின் நிலத்தை தான் சார்ந்த அமைப்பின் மூலம் முறைப்படி விலைக்குப் பெற்றார்.
அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் மாற்றத்துக்கு உடன்பட மறுத்தாலும், நாளடைவில் இணங்கினர். தேவாலயம், வீடுகள், தெருக்கள், சாலைச் சந்திப்புகள், கிணறுகள் என அந்தக் கிராமத்தை திட்டமிட்டு அவரே வடிவமைத்தார். அவர் தெருக்களில் வரிசையாக மரங்களை நட்டு அழகுபடுத்தினார். உண்மையில் அவர் தன் வாழ்வின் இறுதிவரை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.
அவர் தொடர்ந்து இடையன்குடிக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் வருகைதந்து கிறித்தவ நம்பிக்கையைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினார். தமிழில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அவரால் அடித்தட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உரையாடவும் முடிந்தது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் இடையன்குடியில் தங்கியிருந்து செயல்பட்டார்.
அதேபோன்று, திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பிற கிறித்தவ அமைப்புகளிடமும் நெருக்கமான தொடர்புகளைப் பேணினார். அவர்களுள் மெய்ஞானபுரம் சி.எம்.எஸ். கிறித்தவசபையின் ஜான் தாமஸ், நாகர்கோவிலின் லண்டன் கிறித்தவர் கழகத்தைச் சேர்ந்த சார்லஸ் மால்ட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சார்லஸ் மால்ட்டின் மகள் எலிஜாவைத்தான் கால்டுவெல் 1844, மார்ச் 20-இல் திருமணம் செய்துகொண்டார்.
1842-இல், கேள்விகள் எழுப்பி பதிலளிக்கும் முறையில் கிறித்துவ மதபிரசாரகர்களை உருவாக்கும் பள்ளியொன்றைத் தொடங்கினார். மாதிரி பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தி, பைபிளில் குறிப்பிட்ட பகுதிகளைத் தந்து அதிலிருந்து எப்படி பிரசங்கம் நிகழ்த்துவது என பயிற்சியளித்தார். ஆண்டுக்கொருமுறை இப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு தேர்வும் நடத்தி, திறமையானவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.
கால்டுவெல் திருநெல்வேலி வரும்முன்பே பிற கிறித்தவ அமைப்புகளால் ஆரம்பப் பள்ளிகள் உருவாக்கப் பட்டிருந்தாலும், அவர் வந்தபோது அவை நலிவடைந்த நிலையில் காணப்பட்டன. மாணவர்கள் பள்ளி வருவதும் அபூர்வமாயிருந்தது. எனவே அவர் குழந்தைகளிடம் பெற்றோர்களிடமும் நயந்துபேசி அவர்களை பள்ளிக்கு வருகை தரச் செய்தார். பள்ளி வரும் பழக்கத்தை ஊக்குவிக்க, அவர் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு பைசா வழங்கினார். பொதுவாக குழந்தைகள் சுயமாக பைபிள் வாசிப்பதை ஊக்குவிப்பதுதான் கிறித்தவ சபையின் நோக்கமென்றாலும், இந்தப் பள்ளிகள் மாணவர்கள் வாசிக்கவும். எழுதவும், கணக்கிடவும் கற்றுத்தந்தன.
கால்டுவெல் மகளிர் பள்ளியொன்றையும் துவங்கினார். தொடக்கத்தில் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் வராதபோதும், அவரது மனைவி எலிஜாவின் துணையுடன் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எஸ்.பி.ஜி. கிறித்தவ சபைகளில் சில திருநெல்வேலியில் உயர்கல்வி அமைப்புகளைத் தொடங்குவது குறித்து ஆலோசித்தன. அதன் விளைவாக 1880-இல் சாயர் புரத்தில் கல்லூரியொன்று தொடங்கப்பட்டது. பின்பு அதனை தூத்துக்குடிக்கு மாற்றவேண்டி வந்தபோது, கால்டுவெல் ஆற்றிய சமயப்பணி மற்றும் சமூகப் பணியின் ஞாபகார்த்தமாய் அதற்கு "கால்டுவெல் கல்லூரி' என பெயரிடப்பட்டது.
தமிழுக்கு கால்டுவெல்லின் பங்களிப்பு தான் சிறந்த மதபோதகராக திகழ வேண்டுமெனில் தான் பணிசெய்யுமிடத்தின் மக்கள் பேசும் மொழியை பேசவேண்டியதன் தேவையை கால்டுவெல் உணர்ந்திருந்தார். கால்டுவெல்லின் தமிழ்ப் புலமையை அவர் பணியாற்றிய கிறித்தவ சபையும் உணர்ந்திருந்தது. எனவேதான், "போயர் பதிப்பு' என்றழைக்கப்படும் திருத்தி யமைக்கப்பட்ட தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு உருவாக்கத்தின்போது, அதற்கான குழுவில் கால்டு வெல்லின் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டன. அந்தப் பதிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
ஆனால், இவையெதனையும்விட தமிழறிஞர்களும், தமிழ் மக்களும், "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலுக்காகவே அவரைப் பெரிதும் போற்றுகின்றனர். இதன் முதல் பதிப்பு 1856-லும், திருத்திய மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு 1873-லும் வெளிவந்து இன்றும் அழியாப்புகழுடன் திகழ்கிறது. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு அவரது படைப்பு தந்த பங்களிப்பு ஒப்பில்லாத ஒன்றாகும். தமிழுக்கான இவரது பங்களிப்பைப் போற்றும் விதத்தில் தமிழகஅரசு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது அவரது சிலையை சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் அவரது சிலையை நிறுவி கௌரவித்தது.
மேலும் அவரது ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாக "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' (A Political and General History of the district of Tirunelveli from the earliest time to AD 1881) நூலைக் கூறலாம். இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வெறும் பாடநூல் வரலாற்றில் சலிப்புற்றவர்கள் இந்நூலை வாசித்தால் வரலாறு எத்தனை சுவராசியமானது என்பதை அறியலாம்.
1849-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் பார்த்த நாடார் இன மக்களின் வாழ்க்கை முறையை "திருநெல்வேலி நாடார்கள்' என்ற தலைப்பில் இங்கிலாந்தில் வெளியிட்டார். ஆனால், தமிழகத்தில் அந்நூலுக்கு எதிர்ப்பும் சர்ச்சையும் பெருகியது. அந்நூலை எழுதியதற்கான பின்னணியிலுள்ள நோக்கத்தை எத்தனையோ விதமாக எடுத்துரைத்தும், அந்நூலை திரும்பப் பெற நேர்ந்தது.
கட்டடக்கலைக்கு கால்டுவெல்லின் பங்களிப்பு
இடையன்குடியில் கோபுர வடிவில் கால்டுவெல் எழுப்பிய பிரம்மாண்டமான தேவாலயம் அவரது பெயர்சொல்லும் விதமாய் திகழ்கிறது. 1845-இல் ஏற்பட்ட சூறாவளியில் பழைய தேவாலயம் பெரிதும் சேதமுற்றதால், அவர் பெரியதொரு தேவாலயத்தைக் கட்டத் திட்டமிட்டார். அவரது ஓவிய அறிவும் அதற்குத் துணை நின்றது. நான்காண்டுகளில் கட்டத் திட்டமிடப்பட்ட அந்தத் தேவாலயம், பல்வேறு தடையினால் 32 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவுற்றது. எனினும் கோதிக் பாணியிலமைந்த தேவாலயக் கட்டடம் இன்றும் கால்டுவெல்லின் பெயர் சொல்லும் கட்டடமாகத் திகழ்கிறது.
தன் வாழ்நாள் முழுவதும் மதபோதகராக பணியாற்றிய கால்டுவெல், இறுதிக்காலத்தில் வலிந்து பணிஓய்வு பெற நிர்பந்திக்கப்பட்டார். தன் கடைசிக்காலத்தை கொடைக் கானலில் செலவிட்ட கால்டுவெல் 1891, ஆகஸ்டு 28-இல் மரணமடைந்தார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடல் இடையன்குடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இரு நூற்றாண்டுக் காலத்தையும் தாண்டி அசைக்கமுடியாத அளவுக்கு கால்டுவெல்லின் புகழ் நிலைபேறடைந்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையை ஆராய்ச்சியுடன் எழுதியிருக்கும் க. சுப்பிரமணியன் என்கிற நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment