தென்னிந்திய வரலாற்றுடன் இணைந்த திருநெல்வேலியின் இரண்டாயிரம் ஆண்டுக்கால நெடிய வரலாற்றை மீட்டெடுக்க இந்நூல் முயற்சி செய்கிறது (வின்செண்ட் குமாரதாஸ்)
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்திலும், 1858க்கும் பின் ஏற்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் போதும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வரலாறுகள் ஆங்கில அதிகாரிகளால், ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, நூல்வடிவில் வெளிவந்தன. ‘மானுவல்’, ‘கெசட்டியர்’ என்ற பெயர்களில் இவை வெளியாயின. ஒரு குறிப்பிட்ட நிர்வாகப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஆங்கில அதிகாரிகளுக்கும், இவர்களுக்கு மேலதிகாரிகளாக சென்னையில் இருந்த ஆங்கில அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட நிர்வாகப் பகுதி குறித்த அறிமுகத்தைச் செய்வதுதான் இந்நூல்களின் அடிப்படை நோக்கமாக அமைந்தது.
இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், குறிப்பிட்ட நிர்வாகப் பகுதியின் தொடக்ககால வரலாறு, ஆங்கில ஆட்சி அங்கு நிலைபெற்ற வரலாறு, நில அமைப்பு, ஆறுகள், மலைகள், காடுகள் குறித்த புவியியல் செய்திகள், வாழும் மக்கள், அவர்களிடம் நிலவும் சாதிப்பிரிவுகள், பழக்க வழக்கங்கள், சமயம், பண்பாடு, தொழில் ஆகியனவற்றை அப்பகுதிக்குப் புதிதாகப் பொறுப்பேற்கும் அதிகாரிகள் புரிந்துகொள்ள இவை துணைசெய்தன.
இவ்வகையில் ஆங்கில ஆட்சிக் காலத் திருநெல்வேலி மாவட்டத்தைக் குறித்துப் பின்வரும் இரு ஆங்கில நூல்கள் வெளியாயின :
1) ஸ்டூவர்ட் (1879): திருநெல்வேலி மானுவல்
2) பேட் (1917): திருநெல்வேலி மாவட்டக் கெசட்டியர்.
இவ்விரு நூல்களும் மேற்கூறியபடி நிர்வாக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந் நோக்கத்தில் இருந்து விலகி நின்று, இவ்விரு நூல் களுக்கும் இடைப்பட்ட காலமான 1881-இல் கால்டு வெல்லின்; ‘திருநெல்வேலி வரலாறு’ வெளியானது. இந்நூலுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்பு வருமாறு:
A: History of Tinnevlly From the Earliest Period To its cession to the English Government in A.D.1801.இந்நூல் அதிகாரிகளுக்கான வழிகாட்டி நூலாக அல்லாமல் வரலாற்று நூலாகவே எழுதப்பட்டுள்ளது.
திருநெல்வேலிச் சீமை
விசயநகரப் பேரரசின் படையெடுப்புக்குத் தமிழகம் ஆளான பின்னர், அப்பேரரசின் கட்டுப்பாட்டிற்கு உட் பட்ட ‘மண்டலம்’ என்ற நிர்வாகப் பகுதி உருவானது. இவ்வகையில் உருவான மண்டலமே மதுரை.
மதுரை மண்டலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டவர் நாயக்கர் என்ற பதவிப் பெயர் பெற்றார். மண்டலத்தின் உட்பிரிவாகச் சீர்மை என்பது அமைந்தது. இதுவே பேச்சுவழக்கில் ‘சீமை’ எனப் பட்டது.
மதுரையின் தென்பகுதியில் உருவாக்கப்பட்ட சீமையாகத் திருநெல்வேலிப் பகுதி அமைந்தது. திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டிருந்த இச்சீமைக்கு மேற்கெல்லையாக மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்கெல்லையாக வங்கக் கடலும் அமைந்தன. இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் தென்பகுதியும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் இச் சீமையில் அடங்கியிருந்தன. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதி அவ்வப்போது இச்சீமைக்குள் அடங்கி வந்தது.
மாவட்டம்
தென்பாண்டி நாடு என்ற பெயரில் இதே பகுதி நாயக்கர் ஆட்சிக்கு முன்னர் அழைக்கப்பட்டது. ஆங்கில அரசு இப்பகுதியில் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்ட பின் இப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் என்றாயிற்று. நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதியாய்த் தொடர்ந்தது.
* * *
இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்ற அய்ரோப்பியர்களின் வழக்கமான கூற்றுடன் தன் நூலைத் தொடங்கும் கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டம் மதுரையின் ஒரு பகுதியே என்று கருதுகிறார் (கால்டுவெல் 2004:3). அடுத்து திருநெல்வேலியின் பூர்விகக் குடிகள் குறித்துச் சில கருத்துக்களை முன் வைக்கிறார். அவரது கருத்துப்படி ஆதிதிராவிடர்கள் (பறையர்), மள்ளர் (பள்ளர்) என்ற இரு சமூகத்தினரும் தான் மாவட்டத்தின் பூர்வீக குடிகள். இம்முடிவுக்கு வருவதற்கு அவர் கூறும் காரணம் இதுதான்:
இம்மாவட்டத்தின் பல்வேறு சாதியினரிடையே இடம்பெயர்ந்து வந்தது குறித்த பாரம்பரியச் செய்திகள் உள்ளன. ஆனால் இவ்விரு சாதியினரிடமும் இடப் பெயர்ச்சி குறித்த செய்தி எதுவுமில்லை.
தாமிரவருணிஆறு
இதன் தொடர்ச்சியாக இதே மாவட்டத்தில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் கடலில் கலந்து வந்த பொருநை ஆறு குறித்துச் சற்று விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் உற்பத்தி குறித்த புராண, இலக்கியச் செய்தி களையும், கிரேக்க நாட்டவரின் பதிவுகளையும், இதில் கலக்கும் சிற்றாறு குறித்தும் விவரித்துள்ளார் (மேலது 5-11).
பாண்டிய மன்னர்கள்
பாண்டியர் என்ற பெயரின் மூலம் குறித்தும், அவர்களது பட்டங்கள் குறித்தும் சிங்களவர்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் விளக்கி யுள்ளார் (மேலது 12-15). பாண்டியர்கள் குறித்த கிரேக்கப்பதிவையும், ரோம் நாட்டை ஆண்ட அகஸ்ட்டஸ் சீசருக்குத் தூதனுப்பிய இந்திய மன்னன் போரஸ் (புருசோத்தமன்) அல்லன் பாண்டிய மன்னனே என்றும் கூறுகிறார் (மேலது 16-17).
கொற்கை
பாண்டியர் காலத்தில் சிறப்புற விளங்கிய துறைமுகம் கொற்கை. இப்பகுதியில் கிடைத்த முத்துக்கள் சிறப்பாகக் கருதப்பட்டன. கொற்கைத் துறைமுகம் குறித்த கிரேக்கர்களின் எழுத்துப்பதிவை, குறிப்பாக தாலமியின் எழுத்துப்பதிவை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவரது கருத்துப்படி தற்போது கடலில் இருந்து விலகி உள்நாட்டுப் பகுதியாக இருக்கும் கொற்கை, முன்னர் கடற்பகுதியாக இருந்துள்ளது. கடல் உள் வாங்கிச் சென்ற பிறகு மத்திய காலத்தில் காயல் துறை முகமாக மாறியது. இச்செய்திகளையடுத்து குமரித்துறை பாம்பன் ஆகியன குறித்த செய்திகளுடன் முதல் இயல் முடிகிறது.
* * *
இரண்டாவது இயலில் பாண்டிய நாட்டின் எல்லைகள் தொடங்கி, பாண்டிய மன்னர்கள், பாண்டியர், சோழர் முரண், சோழபாண்டியர் என்ற பரம்பரை, சுந்தரபாண்டியனுக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான உறவு, தகியுடின், சிராஜிதன், நிஜாமுதின் என்ற இஸ்லாமியர்கள் அவனது அமைச்சர்களாக இருந்தமை ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ன.
மாலிக்காபூரின் படையெடுப்பு குறித்தும் குறிப்பிடப் பட்டுள்ளது. மார்க்கோ போலோ குறிப்பிடும் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனே என்பது அவரது கருத் தாகும்.
சுந்தர பாண்டியனின் காலம் குறித்துச் சிக்கல் உள்ளதாகக் கூறும் அவர் கூன் பாண்டியன் எனப்படும் பாண்டிய மன்னனையும் சுந்தர பாண்டியனையும் ஒன்றாகக் கருதுகிறார் (பக்கம் 35). அவரது இக்கருத்து தவறானது. நின்ற சீர் நெடுமாறன் பாண்டிய மன்னனே கூன் பாண்டியனாவான். சுந்தர பாண்டியன் காலத்தால் இவனுக்குப் பிந்தியவன். கி.பி.பத்தாம் நூற்றாண்டில் இருந்துதான் பாண்டியர் கல்வெட்டுக்களில் சுந்தர பாண்டியன் என்ற பெயர் இடம்பெறுவதாகத் தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் உரையாடலின் போது குறிப்பிட்டார்.
மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து காயல் துறைமுகம் தொடர்பான விரிவான மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வாயிலாக அப்போதைய காயல் நகரம், அங்கு நிகழ்ந்த வணிகம் குறிப்பாகக் குதிரைவணிகம், முத்துக்குளிப்பு நிகழ்ந்த முறை ஆகியன குறித்த விரிவான செய்திகளை அறிந்து கொள்ளமுடிகிறது.
இப்பகுதியில் அவர் மேற்கொண்ட கள ஆய்வில் சீன, அரேபிய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன (பக்: 4). விசயநகரப் பேரரசின் ஆட்சி குறித்த செய்திகளும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன.
* * *
மூன்றாவது இயலில் பிற்காலப் பாண்டியர் மற்றும் நாயக்கர் ஆட்சிக்காலம் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் வலுப்பெற்றிருந்த பாளையக்காரர் முறை குறித்து நெல்சன் என்ற ஆங்கில அதிகாரி எழுதியது விரிவான மேற்கோளாக இடம் பெற்றுள்ளது (இதன் தொடர்ச்சி போன்று பாளையக் காரரின் செயல்பாடு நான்காவது இயலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது).
இவ்வியலில் நாயக்க மன்னரின் ஆட்சி குறித்த கால்டுவெல்லின் மதிப்பீடு பின்வருமாறு அமைந்துள்ளது:
முந்தைய அரச பரம்பரைகளைவிட நாயக்கர் ஆட்சி மோசமானது என்று கருதக் காரணங்கள் இல்லை. நாயக்கர்களுக்கு முன்பு ஆட்சி செய்தவர்களான பாண்டியரையும் சோழரையும் சிறந்த ஆட்சியாளர் என்று கருதமுடியாது. இவர்களின் ஆட்சிக்காலத்தில் சாலைகள் இல்லை. இருபுறமும் மரங்கள் கொண்ட பாதைகள்தான் சாலைகளாக இருந்தன. பாலங்களும் இல்லை. தலைநகரில் மட்டுமே நீதிபதிகள் இருந்தனர். அரசர்களே நீதிபதியாகச் செயல்பட்டனர். இவர்களுக்குப் பிராமணர்கள் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். வாணிபத் திற்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. பொருள் சேர்த்த வணிகர்கள் தம் பொருள் வளத்தை வெளியே காட்டத் துணியவில்லை. மருத்துவ மனைகள் இல்லை. மன்னரின் விருப்பம் அல்லது இறுக்கமான மரபு, சாதி யழுங்குகள் ஆகியன வற்றைக் கொண்டே வழக்குகளும் சிக்கல்களும் தீர்த்துவைக்கப்பட்டன. தம் முன்னோரைவிடச் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும் என்று எண்ணவில்லை, அதற்கான முயற்சியும் செய்யவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சி உருவாகும் வரை பொது மக்களின் வாழ்க்கையை உயர்த்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுப்பணியாக நீர்ப்பாசன முறை மட்டுமே பரவலாகச் செயல்படுத்தப் பட்டது. மிக விரைவாகவும் பரவலாகவும் மேற் கொள்ளப்பட்ட இப்பணியை முன்னெடுத்துச் செய்தோர் மன்னர் அல்லர் மக்கள்தான். முக்கியமான ஆறுகளுக்குக் குறுக்கே, குறிப்பாக தாமிரவருணியின் அணைகள் கட்டப்பட்டன. நிலப்பகுதி எங்கும் குளங்கள் இருந்தன (கால்டுவெல்: 63).
கால்டுவெல்லின் இம்மதிப்பீட்டில் ஓரளவு உண்மை இருந்தாலும் அவரது அய்ரோப்பிய இனமையவாதச் சிந்தனையின் தாக்கம் மேலோங்கியுள்ளது. அய்ரோப் பாவை ஆண்ட மன்னர் ஆட்சிக் காலமும் இத்தகைய நிலையில்தான் இருந்துள்ளது. மதகுருக்கள், அவர்கள் நடத்திய சமய நீதிமன்றங்கள், வழங்கிய தண்டனைகள், நிலப்பிரபுக்கள் கொண்டிருந்த முதலிரவு உரிமை, குடியானவர்களின் அவலநிலை எனப் பல இருண்ட பக்கங்கள் அய்ரோப்பிய வரலாற்றிலும் உண்டு. இவை யெல்லாம், நாடு, மொழி, மதம் என்ற எல்லைகளைத் தாண்டி நிலஉடைமைச் சமூகத்தின் நடைமுறைச் செயல்பாடுதான் என்ற உண்மையை அவர் உணரத் தவறிவிட்டார் என்றே கூறுதல் வேண்டும்.
அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் குறித்து எழுதியுள்ளார். இங்குள்ள எட்டு அணைக்கட்டுகளில் ஏழு அணைக்கட்டுகள் ஆங்கில ஆட்சிக்கு முன்னரே கட்டப்பட்டவை என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.
தாமிரவருணி ஆற்றின் கனடியன் அணைக்கட்டு தொடர்பாக, சங்குண்ணி மேனன், தமது ‘திருவிதாங்கூர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேட்டுச் செய்தியை விரிவான மேற்கோளாகக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுக்கீசியர், 16ஆம் நூற்றாண்டில் இம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் நிலைகொண்டு செயல்பட்டமை குறித்தும், தூத்துக்குடி நகர் குறித்தும், போர்ச்சுக்கீசியரை அடுத்து டச் ஆதிக்கம் உருவானது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். முத்துக்குளித்தல் தொடர் பாக மார்ட்டின் என்பவர் எழுதிய செய்திகளும் பருத்தி ஆலைகள் உருவானமை குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
* * *
நான்காவது இயலும் அய்ந்தாவது இயலும் நெருக்கமான தொடர்புடையவை.
ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் இம்மாவட்டம் வருதல், கம்மந்தான் கான்சாகிப் என்றழைக்கப்பட்ட முகமது யூசப்கான், இப்பகுதியை, தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரல், அவனது கட்டுப் பாட்டிற்குள் இருந்த மதுரையை ஆங்கிலேயர் கைப் பற்றல், அவனது மரணம் ஆகியன இவ்வியல்களில் இடம்பெற்றுள்ளன.
* * *
நவாபிடமிருந்து வரிவாங்கும் உரிமையைப் பெற்றிருந்த ஆ.கி.கம்பெனி தன்னை இப்பகுதியில் நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள், பாளையக்காரர்களுடன் இது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளும் மோதல்களும், 1771 இல் திருநெல் வேலி கச்சேரி (அரசு அலுவலகம்) கொளுத்தப்பட்டு ஆவணங்கள் எரிந்துபோனமை என 1764 தொடங்கி 1799 முடிய இப்பகுதியில் ஆங்கிலேய கம்பெனியை மையமாகக் கொண்ட நிகழ்வுகள் ஆறாவது இயலில் இடம்பெற்றுள்ளன.
பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரில் இடம்பெறும் பாஞ்சா என்ற சொல் பாரதக் கதையின் கதாபாத்திரமான பாஞ்சலியை மையமாகக் கொண்டு உருவானதாகக் குறிப்பிடுகிறார். இது செவிவழிச் செய்தியை அடிப்படை யாகக் கொண்டது.
மாவட்ட நிர்வாகியை மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற தமிழ்ச் சொல்லால் இன்று அழைக்கிறோம். இதற்கு இணையாக ஆங்கில ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட சொல் ‘கலெக்டர்’ என்பதாகும்.
நிலவரியே ஆங்கிலேய கம்பெனியின் அடிப்படை வருவாய் இனமாக இருந்தமையால் குறிப்பிட்ட மாவட்டத்தில் அதை வாங்குபவர் (வசூலிப்பவர்) என்ற பொருளைத் தரும் கலெக்டர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார். இன்று அவரது பணியின் தன்மை மாறியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கலெக்டராக, ஜியார்ஜ் புரோக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். வரி வாங்கும் தன் வேலையை இவர் செய்ய முயன்றபோது பாளையக்காரர்கள் சிலருடன் முரண்பாடு தோன்றியது. இவர்களில் புலித்தேவரும், கட்டபொம்மனும் முக்கிய மானவர்கள். இச்செய்திகளையும் இவ்வியல் குறிப்பிடுகிறது.
* * *
ஏழாவது இயலின் முக்கிய செய்தியாக அமைவது மேஜர் பானர்மேன் தலைமையிலான ஆ.கி.கம்பெனிப் படைக்கும் கட்டபொம்மனுக்கும் இடையில் 1799 இல் நடந்த சண்டையாகும்.
இச்சண்டையின் தொடக்கம் குறித்த வரலாற்றுப் பின்புலத்தை கி.பி.1781 இல் இருந்து கால்டுவெல் அறிமுகப்படுத்துகிறார். இவ்வியலில் ஆ.கி.கம்பெனியின் மூல ஆவணங்களை வரிபிறழாது அவர் மேற்கோளாகக் கொடுத்துள்ளார், இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருநெல்வேலியில் ஆட்சித்தலைவர்களாக இருந்த ஜாக்சன், லூசிங்டன், சென்னையில் இருந்த வருவாய்த் துறை வாரியத்தின் உயர் அதிகாரிகள் பாஞ்சாலங் குறிச்சிப் போரை நடத்திய மேஜர் பானர்மேன் ஆகியோருக்கு இடையிலான கடிதப்போக்குவரத்து, சென்னையின் ஆளுநராக இருந்த கிளைவ் அனுப்பிய பிரகடனம் என்பன குறிப்பிடத்தக்க ஆவணங்கள். பாஞ்சாலக்குறிச்சிப் போரை 1799 இல் நடத்திய மேஜர் பானர்மேன் சென்னை அரசின் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கட்டபொம்மனின் அமைச்சரையும், கட்ட பொம்மனையும் பிடித்துத் தூக்கிலிட்டது குறித்து எழுதியுள்ளான். அது வருமாறு:
சுப்பிரமணிய பிள்ளையைக் கைதியாக என் கூடாரத்திற்குக் கொண்டுவந்தனர். இவரைக் கொண்டு வந்த எட்டையபுரத்து ஆட்களுக்கு நல்ல வெகுமதி தர உத்தரவிட்டேன். மேலும் நாகலாபுரத்தில் பலரும் கூடுமிடத்தில் சுப்பிர மணிய பிள்ளையைத் தூக்கிலிட்டு, பின் அவர் தலையைக் கொய்து, அதை ஈட்டியில் சொருகி பஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குக் கொண்டு வந்து பொதுஇடத்தில் வைக்கும்படி கூறினேன் (கால்டுவெல்: 185).
அரசின் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்ட இம்மனிதனுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை ஏனையோருக்கு ஒருபாடமாக இருக்கவேண்டுமென்று எண்ணிச் செயல்பட்டுள்ளேன். (மேலது).
* * *
நேற்று விசாரணையின்போது, கூடியிருந்தோர் முன்பாக இப்பாளையக்காரர் (கட்டபொம்மன்) மிக அற்பத்தனமாகவும் திமிராகவும் நடந்து கொண்டார் என்பதை இங்கே குறிப்பிடுவதில் தவறில்லை. இவரைக் கைது செய்ய உதவிய எட்டையபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை வெறுப்புடனும் கோபமாகவும் அடிக்கடி நோக்கினார். தூக்கிலிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டபோது செருக்குடனும் வீரமாகவும் நடந்து சென்றார். வலது புறத்திலும் இடது புறத்திலும் நின்றிருந்த பாளையக்காரர்களை இழிவாக நோக்கினார்.
எட்டாவது இயல் 1801 இல் ஊமைத்துரை நடத்திய இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரைக் குறிப்பிடு கிறது. இப்போரை நடத்திய கர்னல் வெல்சின் குறிப்பு களை இவர் பயன்படுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர்களுடன் தமிழ்க் கிறித்தவர்களையும் இணைத்து நோக்கி அவர்களுக்குப் பாளையக்காரர்கள் இழைத்த கொடுமைகளும் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.
காயம்பட்ட ஊமைத்துரையைப் படைவீரன் ஒருவனின் தாய் காப்பாற்றிய வரலாற்றை வெல்சின் நாட் குறிப்பில் இருந்து மேற்கோளாகக் காட்டியுள்ளார். முதற் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் மாண்ட ஆங்கிலப் படை யினரின் கல்லறைகள் ஓட்டப்பிடாரத்திலும், இரண்டாம் பாஞ்சாலக்குறிச்சிப்போரில் இறந்து போனவர்களின் கல்லறைகள் பாஞ்சாலங்குறிச்சியிலும் உள்ளன. இக்கல்லறைகளில் இடம்பெற்றுள்ள கல்லறை வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளார். நமசிவாயம் என்பவர் எழுதிய ‘பாஞ்சாலங்குறிச்சி சிந்து’ என்ற நூல் குறித்து கீரன் பாரதியார் எழுதியுள்ளதையும் ‘வெற்றி காண்டம்’ என்ற தலைப்பில் அதில் இடம்பெற்றுள்ள செய்தியையும் எடுத்தாண்டுள்ளார்.
* * *
ஒன்பதாவது இயல் சிவகங்கை, காளையர்கோவில் பகுதியில் மருது சகோதரர்களுடன் நடத்திய யுத்தத்தைக் குறிப்பிடுகிறது. மாநில ஆளுநரின் உத்தரவின் அடிப் படையில் லெப்டினன்ட் கர்னல் ஆக்னியூ வெளியிட்ட பிரகடனம் ஒன்று அப்படியே இவ்வியலில் இடம் பெற்றுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 1801 வரை நிகழ்ந்த பாளையக்காரர்களுடனான போராட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஆ.கி.கம்பெனி தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுடன் இவ்வியல் முடிவடைகிறது. இவ்வாறு நிலைபெற்ற ஆ.கி.கம்பெனி ஆட்சியை, ‘நல்லாட்சி’ என்று குறிப்பிடும் கால்டுவெல் இது தொடர்பாக மேலும் கூறுவது வருமாறு:
அன்பான இந்த ஆட்சி இம்மக்களுக்கு அனைத்து இக்கட்டுகளிலும் உதவியாக இருந்துள்ளது. இவர்களை இவர்களே ஆட்சி செய்யக் கற்றுக் கொடுத்துள்ளது. முன்பிருந்த ஆட்சிகளைவிட இந்த ஆட்சியே சிறந்தது. ஒரு சில மக்களை மட்டுமே உயர்த்தாமல் அனைத்து மக்களையும் உயர்த்தியுள்ளது. இம்மாவட்ட மக்கள் நிம்மதி யாகவும் மனநிறைவுடனும் வாழ்கின்றனர். ஏறத்தாழ பதினேழு இலட்சம் மக்களைப் பத்து ஆங்கிலேயரே கொண்ட நிர்வாகம் ஆட்சி செய்வது என்னே வியப்பு! இப்பதினேழு இலட்சம் மக்கள் பத்து அய்ரோப்பியருக்குக் கட்டுப்பட்டு பணிந்து வாழ்வது அதிசயமான ஒன்று. இந்த ஆட்சியை இம்மக்கள் முணுமுணுப் பின்றி முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைபெற்றிருந்த ஆங்கில ஆட்சி குறித்த இம்மதிப்பீடு காலனிய ஆதரவுப் போக்கின் வெளிப்பாடுதான். ஆனாலும் மேட்டிமை சாதியினரின் ஆதிக்கம் என்ற சமூக யதார்த்தம் இம்மதிப்பீட்டை முழுமையாக மறுக்க விடாது செய்து விடுகிறது. நூலின் இறுதி இயலான பத்தாவது இயல் இம்மாவட்டத்தில் கத்தோலிக்கக் கிறித்தவமும், சீர்திருத்தக் கிறித்தவமும் பரவிய வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. காமநாயக்கன் பட்டி என்ற ஊரில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
கால்டுவெல் வாழ்ந்த காலத்தில் மேற்கூறிய இரு கிறித்தவப் பிரிவுகளுக்கும் இடையே நிலவிய இணக்க மின்மை இப்பகுதியில் வெளிப்படுகிறது. கத்தோலிக்கக் குரு மார்ட்டின் 1700 இல் எழுதியுள்ள குறிப்புக்கு மாறான நிலை 1660 இல் இப்பகுதியில் நிலவியதாகச் சீர்திருத்த சபைக் குருவான பால்தூஸ் என்பவரின் குறிப்பைத் துணையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். டச் நாட்டினர் தமக்கென்று கட்டியதாக அவர் குறிப்பிடும் தேவாலயத்தில் கத்தோலிக்கப் பெண்ணின் கல்லறை வாசகம் அடங்கிய கல்வெட்டு இடம்பெற்றுள்ளதை அவர் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களுக்கு உரிய வழிபாட்டுத்தலம் கைப்பற்றப்பட்டதற்குச் சான்றாக இக்கல்வெட்டைக் கருதமுடியும். நூலின் இறுதியில் அய்ந்து பின்இணைப்புகள் இடம்பெற்றுள்ளன.
முதல் பின்இணைப்பு திருவிதாங்கூருக்கும் திரு நெல்வேலிக்குமான உறவு குறித்தது. இரண்டாவது பின் இணைப்பு இம்மாவட்டத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு மற்றும் தொற்றுக்காய்ச்சல் குறித்தது. மூன்றாவது பின்இணைப்பு இப்பகுதியின் எழுத்தாளர் களான அகத்தியர், நம்மாழ்வார், பரிமேலழகர் ஆகி யோரைக் குறித்தும் இலக்கியத் தொடர்புடைய சில ஊர்கள் குறித்தும் குறிப்பிடுகிறது. நான்காவது பின் இணைப்பு தொல்லியல் சான்றுகளாகக் கிடைத்த தாழிகளைக் குறிப்பிடுகிறது. அய்ந்தாவது பின்இணைப்பு கொற்கையிலும் காயலிலும் நிகழ்த்திய அகழ் ஆய்வுகளைக் குறித்தும் அதில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் குறித்தும் விவரிக்கிறது. தனி மனிதராகக் கொற்கையிலும் காயலிலும் அகழ்வாராய்ச்சியை அவர் மேற்கொண்டுள்ளதை இப்பின்னிணைப்பு வாயிலாக அறியும்போது வியப்படைய நேருகிறது.
* * *
நூலின் சிறப்பு
கிறித்தவ மறைப்பணியாளர் ஒருவர் தம் மறைப் பணிகளுக்கிடையில் பல்வேறு அறிவுத்துறைச் சான்று களைத் திரட்டி ஆய்வு செய்து ஒரு மாவட்டத்தைக் குறித்த வரலாற்று நூலொன்றை எழுதியது குறிப்பிடத் தக்க ஒன்றுதான்.
அய்ரோப்பிய மறைப்பணியாளர் என்ற முறையில் காலனிய ஆட்சியை விமர்சிக்கும் தன்மை இல்லாமல் போனதும் இன்று நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் அவர் காலத்தில் கிட்டாமையாலும் வெளியாகாமையாலும் ‘சமூக வரலாறு’ என்ற வரலாற்று வகைமை வளர்ச்சியுறாமையாலும் அவரது நூலில் சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன. அவர் இந்நூலை எழுதிய காலத்திய சமூகச் சூழலை மனதில் கொண்டால் இந்நூலைக் குறை கூறி எளிதாக ஒதுக்கிவிடமுடியாது.
இன்று வட்டார அளவிலான வரலாற்று வரைவு குறித்தும், பல்துறைச் சங்கம ஆய்வுமுறை குறித்தும் பேசுகிறோம். ஆனால் இச்சிந்தனைப் போக்கு வளர்ச்சி பெறும் முன்பே கால்டுவெல் தமது திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை, பல அறிவுத் துறைச் சான்றுகளின் துணையுடன் எழுதியுள்ளது பாராட்டுதலுக்குரிய ஒன்று. இந்நூலை அடியற்றியே குருகுகதாசப் பிள்ளை (எட்டையபுரம்) என்பவர் ‘திருநெல்வேலி சீமைச் சரித்திரம்’ என்ற தமிழ் நூலை எழுதியுள்ளார்.
தமது ‘இராபர்ட் கால்டுவெல்’ என்ற நூலில் கிறித்தவ மறைத்தள வரலாற்றறிஞர் ஆர்.இ.பிரிகன் பெர்க் இந்நூல் குறித்து ‘தொல்லியல், கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் அவரது மிகச் சிறந்த முழுமையான படைப்பு’ என்று கூறியுள்ளது (வின்செண்ட் குமாரதாஸ் 2008) பொருத்தமான மதிப்பீடாகும். இன்று இந்நூல் ஒளிநகல் பதிப்பாக அச்சிடப்பட்டு விற்பனையில் உள்ளது. இது இந்நூலைப் பலரும் இன்று வாசிக்கத் துணைபுரிகிறது என்பது உண்மையே.
என்றாலும், வரைபடங்கள், புகைப்படங்கள், இன்று கிடைத்துள்ள புதிய தொல்லியல், வரலாற்றுச் சான்றுகளின் துணையுடன் செம்பதிப்பு ஒன்று ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழிலும் வெளிவருவது அவசியமான ஒன்று. கால்டுவெல்லின் வரலாற்றை நல்ல முறையில் எழுதியுள்ள பேராசிரியர் வின்செண்ட் குமாரதாஸ் போன்றோர் இம்முயற்சியில் ஈடுபடுவது அவசியமான ஒன்று. கால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த நாள் விழாவின் தொடர்ச்சியாக இப்பணி நிறை வேறினால் அது அவரது புகழை மேலும் நிலைத்திருக்கச் செய்யும் வழிமுறையாக அமையும்
.
சான்றாதாரம்
1. Caldwell 2004 (1881): A: History of Tinnevlly From the Earliest Period To its cession to the English Government in A.D.1801
2. Vincent Kumaradoss.Y., 2008; Robert Caldwell: A Scholar – Missionary in Colonial South India, ISPCK, New Delhi.
No comments:
Post a Comment