புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சி . எம் . எஸ் . சுத்தாங்க சுவிசேஷ திருச்சபை

சி . எம் . எஸ் . சுத்தாங்க சுவிசேஷ திருச்சபையின் வரலாறு
பத்தொன்பதாம் நாற்றாண்டில் நாசரேத் வட்டார எஸ்.பி.ஜி சபைகள் சிலவற்றில் பிளவு ஏற்பட்டு *சட்டம்பிள்ளை மார்க்கம்* என்று புதியதொரு மார்க்கம் உருவாகி அது இன்றும் நிலைத்துள்ளது.
இதேபோல் இருபதாம் நூற்றாண்டில் சி . எம் . எஸ் . மிஷனெரிகளால் உருவாக்கப்பட்ட சபைகள் சிலவற்றில் பிளவு உண்டாக , *சி. எம் . எஸ் . சுத்தாங்க சுவிசேஷ சபை* என்று புதியதொரு சபைப் பிரிவு உருவாக்கப்பட்டு , அதுவும் இன்று வரை நிலைத்துள்ளது.
ஆனால் இரண்டு பிரிவினைகளுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு.
நாம் அறிந்துள்ளபடி நெல்லை மாவட்டத்தில் சி . எம் . எஸ் . , எஸ் . பி . ஜி என்ற இரு சுவிஷேச சங்கங்களும் தனித்தனியாக இயங்கி வந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.
தங்கள் ஊழியங்கள் மூலம் உருவான சபைகளை தங்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் பராமரித்து வந்தனர் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இச்சபைகள் சென்னை பேராயரின் ஆன்மீக ஆளுகைக்குள் இருந்தன.
பின்னர் 11 . 3 . 1877 ல் சென்னை பேராயர்களாக , சி . எம் . எஸ் , சபைகளுக்குப் பிஷப் சார்ஜென்ட்டும் பேராயரின் உதவி எல் . பி . ஜி . , சபைகளுக்கு பிஷப் கால்டுவெல்லும் அபிஷேகம் செய்விக்கப்பட்டனர்.
இவர்களின் மரணத்துக்குபின் இரு சபைகளுக்கும் சேர்ந்து ஒரே பிஷப்பாக சென்னையிலிருந்து பிஷப் சாமுவேல் மார்லி அபிஷேகம் செய்விக்கப்பட்டார்.
எனினும் இவர் ஆன்மீக ஆளு கைப் பொறுப்பை மட்டுமே கவனிக்க , நிர்வாகப் பொறுப்புகளை முன்போல் சி . எம் . எஸ் , எஸ் . பி . ஜி . , சங்கங்களே கவனித்து வந்தன.
பின்னர் 1905ல் பிஷப் A . A . வில்லியம்ஸ் வந்து சேர்ந்தார்.
இருசங்கங்களின் நிர்வாகங்களும் முன்போல் தனித்து இயங்கி வரவே , இவைகளை இணைத்து செயல்பட வைக்க 1908 ஆம் ஆண்டு ஓர் ஐக்கிய கூட்டம் நடைபெற பிஷப் ஏற்பாடு செய்தார்.
நெல்லை பேராயம் உருவாக இரு சங்கங்களும் இணைய வேண்டும் என்பது இக்கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.
பிஷப் வி . எஸ் . அசரியா அவர்களும் இவ்வைக்கியத்தைப் பெரிதும் விரும்பினார்கள்.
இதன் பின்னர் 1915 - ல் பிஷப் ஹென்றி வாலர் அவர்கள் நெல்லைப் பேராயராக சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப் பட்டார்கள். இவர்கள் சபைகளின் ஐக்கியத்திற்காக ஊக்கமாக ஜெபித்து வந்தார்கள் . இதற்காக தனது இல்லத்தில் ஓர் சிற்றாலயமும் கட்டினார்கள்.
தான் ஊழியம் செய்த காலத்திலும் ( 1915 - 22 ) தனது உபதேசங்களில் இவ்வைக்கியத்தை வற்புறுத்தி வந்தார்கள்.
1917 - ல் சி . எம் . எஸ் . , எஸ் . பி . ஜி . சங்கங்கள் இரண்டிற்கும் பொது வாக ஒரு ஆலோசனை சங்கத்தை நிறுவினார்கள்.
1918 ஏப்ரலில் முதல் நிர்வாக சபை நாசரேத்தில் கூடியது . நெல்லைப் பேராயம் உருவாக மிகவும் முயற்சி செய்தவர்கள் பிஷப் வாலர் அவர்கள்தான். ஆனால் 1923 ஜனவரி முதல் இவர்கள் சென்னை பேராயராக மாற்றப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலாக பிஷப் நார்மன் ஹென்றி டப்ஸ் அவர்கள் 1923 - ல் நெல்லைப் பேராயராக பாளையங்கோட்டையில் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் இவர்கள் காலத்தில் , 1924 மார்ச் 11 - ல் அத்தியட்சர் , ஆலோசனை சபைகூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது இரு சங்கங்களின் பிரதிநிதிகளாக 100 குருமார் , 147 சபை பிரதிநிதிகள் , 5 பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஐக்கியத்திற்கான வாத , பிரதிவாதங்கள் விவாதிக்கப்பட்டன.
முடிவில் பிஷப் அவர்கள் ஐக்கிய ஏற்பாட்டிற்காக அனைவரின் சம்மதத்தையும் கோர் , ஐந்து பேர் மட்டும் அதை எதிர்ப்பதாக கூறி கையை உயர்த்தினர். அவர்களுக்கு சில வாக்குறுதிகள் தரப்பட்டது ,
*எந்த ஆலயத்திலும் பூர்வீக ஆராதனை முறையை சபையின் சம்மதமின்றி மாற்றப்படுவதில்லை. ( உதாரணமாக ஆலயங்களில் சிலுவை வைத்தல் , குருமார் அணியும் அங்கிகளில் கட்டும் ஸ்டோல்களின் ( கச்சை ) நிறம் போன்றவை )
குருமார் , அவர்களின் சம்மதம் இல்லாமல் எஸ் . பி . ஜி . சி . எம் . எஸ் இடையே மாற்றப்பட மாட்டார்கள்.
( பின்னாட்களில் எஸ் . பி . ஜி . குருவான டி . ஜே . தேவ பிரியம் ஐயரவர்கள் சி . எம் . எஸ் . சர்க்கிளான நாலுமாவடியிலும் , சி . எம் . எஸ் . , எஸ் . பி . ஜி . சர்க்கிள்களிலேயே மாறிமாறி பணியாற்றி மறைந்தவர்களும் உண்டு. அதே போல் சி . எம் . எஸ் . வழக்கப்படி கடைசி வரை கறுப்பு ஸ்டோல் மட்டுமே அணிந்த குருமாரும் உண்டு . ) பிரிவினை கருத்துக் கொண்டவர்கள் அனைவருமே ஆழ்வாநேரி , செவல் சி . எம் . எஸ் . வட்டாரங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இவர்களின் அருகில் எந்த எஸ் . பி . ஜி . சபையும் இல்லை . மாறாக இவர்கள் சி . எம் . எஸ் . தலைமை ஸ்தலமான பாளையங்கோட்டைக்கு மிக அருகில் இருந்தனர்.
எனினும் பிரிவினையைத் தீர்க்கமாக நிறைவேற்ற எண்ணியவர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் சபைகளில் பிரிவினையை உருவாக்கி ' சி . எம் . எஸ் . சுத்தாங்க சுவிசேஷ சபை ' என்று ஒரு புதிய அமைப் பினை உருவாக்கி அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்த இடங்களில் உள்ள ஆலயங்கள் , பள்ளிக்கூடங்கள் யாவற்றையும் கைப்பற்றினர்.
வழக்குகள் கோர்ட்டுகளுக்குச் சென்றன. ஒரே ஊரில் ஐக்கிய ஏற்பாட்டை ஆதரித்தவர்களும் , எதிர்த்தவர்களும் இருக்கவே பிரச்சினைகள் உருவாயின.
எனவே ஐக்கிய ஏற்பாட்டை ஆதரிக்கும் மக்களை ஸ்திரப்படுத்தி ஊக்குவிக்க ஆழ்வாநேரி - செவல் என்று புதியதொரு சர்ச் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
அதற்கு தலைவராக அன்றைய சி . எம் . எஸ் . மிஷனெரி ( பின்னாளின் நெல்லை பிஷப் ) ஜி . டி , செல்வின் ஐயரவர்கள் நியமிக்கப்பட்டார்கள் . எனினும் பிரிவினை நிலைத்து விட்டது. ஒரு சில மக்கள் மீண்டும் ஐக்கியத்தில் இணைந்தனர்.
எனினும் ஒரே ஊரில் ( அம்பலம் , கண்டித்தான் குளம் , பானான்குளம் ) இரண்டு ஆலயங்கள் இன்றும் உள்ளன.
இந்தப் பிரிவினையாளர்கள் கூறிய முதல் காரணம் தங்கள் சி . எம் . எஸ் . ஆலயங்களில் எஸ் . பி . ஜி . ஆலயங்களைப்போல் சிலுவைகள் வைக்கப்பட்டு விடும் . நாளடைவில் ஆராதனை முறைகள் மாற்றப்பட்டுவிடும் என்பதே . எண்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும் பழைய சி . எம் . எஸ் . கொள்கைகளிலேயே நிலைத்து செயல்படும் ஆலயங்களும் சபைகளும் ஏராளம் உண்டு.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory