புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி மாம்பழச் சங்கம்

திருநெல்வேலி மாம்பழச் சங்கம்

நெல்லைத் திருமண்டில் விழாக்களில் மாம்பழச் சங்கம் ஒரு விநோதமான பண்டிகை அதன் வரலாறு மிகச் சுவையானது.
நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் நாட்களில் மக்கள் கூட்டங் கூட்டமாகக் கிறிஸ்தவ மதம் தழுவினர்.
1825 ஐ தொடர்ந்த ஆண்டுகளை *அறுவடையின் காலம்* எனலாம்.
புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களின் நடை , உடை , கலை , கலாச்சாரம் அனைத்தும் மாறி புதிய நாகரீகம் அவர்களை அரவணைத்தது.
பிரித்தெடுக்கப்பட்ட தனி சாதியாகப் பீறிட்டெழுந்தனர்.
கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுபடக் கொதித்தெழுந்தனர்.
நெல்லை நாட்டில் குரங்கணி முத்துமாலையம்மன் கோயில் கொடை விழா ஆனி மாதம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
பத்து நாட்கள் ஒரே ஆட்டபாட்டம் தான்.
வெளியூர்களிலிருந்து மக்கள் வருவார்கள். கடா , அரிசி , மஞ்சமசால் மற்றும் அனைத்துப் பொருள்களும் கொண்டு வருவர்.
தாமிரவருணி ஆற்றில் குளித்து ஆட்டுக்கறி புசித்து ஆடிப்பாடி மகிழ்வது ஓர் ஆனந்த அனுபவம்.
வீட்டுக்கொரு ஆட்டுக்கடா வெட்டி மூன்று நாட்கள் ' டோரா அடித்து சாமி கும்பிடுவர். ஆற்று மணலில் ஆடிப்பாடி உண்டு உறங்கிப் பரவசம் கொள்வர் .
*புதிதாகக் கிறிஸ்தவர்களான* மக்கள் அந்த ஆனிமாதம் என்ன செய்வார்கள். ஒரு கிராமத்தில் பாதிப்பேர் கிறிஸ்தவகளென்றால் மீதிப் பேர் குரங்கணி அம்மன் கோயிலுக்குப் போவார்கள். அதைப் பார்த்த *புதுக் கிறிஸ்தவர்கள்* பின் வாங்கிப் போய்விடக் கூடாதே - அல்லது இளக்கரித்து விடக் கூடாதே . அதற்கு ஒரு மாற்று வழி கண்டு பிடிக்க வேண்டுமே ! என்று அன்றைய கிறிஸ்தவர்கள் எண்ணினது இயல்பு.
ரேனியஸ் ஐயர் இது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கலானார் அவர் ஏற்கனவே *விதவைகள் நலச்சங்கம்* என்று ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார்.
கைம்பெண்கள் நலச்சங்க விழா நாளை குரங்கணி அம்மன் கோயில் கொடை நாளுக்கு மாற்றினார்.
அந்நாள் *1834 ஜூலை 8 புதன்கிழமை.* அந்நாளில் ஆரம்பத்தில் ஊழியர்கள் , சபை மூப்பர்கள் முதலியோர் குடும்பமாக வில்வண்டி கட்டி பாளையங் கோட்டை வந்தனர்.
இன்றைய திரித்துவ அத்தியட்சாலய வளாகத் தில் கூடி ஆராதித்தனர்.
அது மாம்பழ சீசனானபடியால் மாம்பழங் கள் வண்டி வண்டியாக அங்கு வந்து குவியும்.
ஆலயத்தில் ஆராதித்து ஆற்றில் குளித்து மகிழ்வர்.
அதே நாளில் இன்றும் நடந்து வருகிறது.
1835 க்குப் பிறகு எட்வர்ட் சார்ஜென்ட் ஐயர் தாம் அதனை பொதுமக்களின் பண்டிகையாக மாற்றினார்.
அம்மன் கோயிலுக்குச் சென்றது போலவே உற்சாகமாகப் பாளையங்கோட்டைக்கு வந்தனர் , வில் வண்டியில் ஒட்டன் மாடு பூட்டி ஜல் ஜல் என்று வரும் அழகே தனி.
ஆண்டுதோறும் கூட்டம் அதிகமானது.
கூடார வண்டிகளில் குடும்பத்தோடு வந்தனர்.
மாம்பழம் நிறைந்து வழிகிற காலமாதலால் அதற்கு மாம்பழச் சங்கம் என்ற பேர் பிரபலமாயிற்று.
பொதுவாகப் பாளையங்கோட்டை கிறிஸ்தவ மக்கள் மாம்பழச் சங்க விழாவில் பங்கு பெறுவதில்லை.
குரங்கணி அம்மனை வழிபட்டு வந்த மக்களே அதிகமாக நான்கு திசைகளிலிருந்து பாளை மாநகர் நோக்கி வந்தமையால் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்த்து ' ஒழுங்கு ' செய்யவும் தோதுவாயிருந்தது.
அது மிக வெற்றிகரமாகவும் - ஆண்டுக்காண்டு விருத்தியாகவும் இருந்தது.
மாப்பிள்ளை பெண்ணையும் , பெண் மாப்பிள்ளையையும் இயற்கையாகப் பார்த்துக் கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது.
எனவே இதனை பலர் ' *மாப்பிள்ளைச் சங்கம்* என்றும் அன்புடன் அழைக்கலாயினர்.
1899 முதல் *மாம்பழச் சங்கம்* என்றும் பின்னர் *கைம்பெண்கள் சங்கம்* என்றும் வழங்கப்பட்டு வந்தது.
பேராயர் அ . ஞா . ஜெபராஜ் ( 1953 ) பேராயர் . டி . எஸ் . கேரட் ( 1971 ) ஆகியோர் காலங்களில் இரு நாட்களின் விழாவானது.
முந்தின நாள் மாலை கதாகாலட்சேபமும் , மறுநாள் காலை பரிசுத்த நற்கருணை ஆராதனையும் , நண்பகலில் காணிக்கை வழிபாடும் , சிறப்பு அருளுரையும் நடைபெற்று வந்தன.
திருமண்டில *இருநூறாவது ஆண்டு விழாவினை கொண்டாடிய பேராயர் தானியேல் ஆபிரகாம்* அவர்கள் காலத்திலிருந்து மூன்று நாள் விழாவானது.
மூன்றாம் நாள் நெல்லைத் திருமண்டில ஆண்டு விழாவாகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் , மூப்பர்களும் பங்கேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பேராயர் ஜேசன் எஸ் . தர்மராஜ் அவர்கள் காலத்தில் நூற்றாண்டு மண்டபம் உள்ளும் , புறமும் புதுப்பிக்கப்பட்டு 217 ஆவது மாம்பழச் சங்கமும் ஆண்டு விழாவும் சி . எஸ் . ஐ . , பொன்விழா ஆண்டில் புதிய நோக்குடன் - புத்தம்புது தெம்புடன் நடந்தது . ( 1997 )
பாளை மாம்பழச் சங்கத்தின் தனிச் சிறப்பு யாதெனில் ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்களும் , தொழுநோயாளர்களும் நூற்றாண்டு மண்டபத்தின் முன்புள்ள இரு மருங்கிலும் மூன்று நாட்களுக்கு முன்பே இடம்பிடித்து துண்டை விரித்து எல்லை கட்டி அமர்ந்திருப்பர்.
மூன்று , நான்கு நாட்களும் ஊண் , உறக்கம் எல்லாம் அந்த இடத்திலேதாம் , வெளியூர்களிலிருந்து வரும் கிராம மக்கள் ஏராளமாக அரிசி , காசு , காய்கறிகள் கொண்டு வந்து வரிசையாக அள்ளி வழங்குவர்.
ஆண்டு தோறும் நேர்ச்சை செய்து நல்ல ஆயத்தங்களுடன் வருவர்.
மொட்டை போடுவது உட்பட எல்லா நேர்த்திக் கடன்களும் தவறாது நடைபெறும்.
தங்கள் வாலிபப் பெண்பிள்ளைகளுக்கு அனைத்து ஆபரணங்களையும் பூட்டி அழகு பார்ப்பர்.
தங்கள் விரிப்புத் துண்டுகளில் காசும் , பொருளும் நிறைந்து பிச்சைக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு உலாவருவர்.
கடந்த 2018 ஆண்டு மாம்பழம் சங்க பண்டிகையிலும் ஒரு கணவன் மனைவி இருவரும் தங்களையே காணிக்கையாக படைத்தனர். அவர்களை ஏலமும் எடுத்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.
உண்மையில் மூன்று நாட்களும் ஏழைகளின் நலச் சங்கமாகவே இருந்து வருகின்றன.
*கைம் பெண்கள் சங்கம் , மாப்பிள்ளைச் சங்கம் , மாம்பழச் சங்கம்*
என்று பல பேர்களைப் பெற்றிருப்பினும் ' *மாம்பழச் சங்கம்*' என்ற பேரே நிலைத்து நின்றது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory