புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
பாடல் பிறந்த வரலாறு
உத்மபாளையத்தில் உள்ள கோவிந்தசாமி கோவில் பூசாரியாக லட்சுமணன் என்பவர் பணிபுரிந்தார். இவர் வைணவ பக்தர். இவரது மூதாதையர் வடதிருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். அங்கு பஞ்சம் ஏற்பட்டதால் செழுமைமிகு கம்பம் பள்ளத்தாக்கிற்கு வந்து குடியேறினர். இவர் அங்கு விவசாயம் செய்ததுடன் ஆடு, மாடுகளும் வளர்த்தார். ஒரு நாள் லட்சுமணன் வளர்த்த மாடு ஒன்று இறந்துவிட்டது. இவ்விழப்பினால் வீட்டில் மிகுந்த வருத்தத்துடன் இருந்த லட்சுமணனுக்கு அமெரிக்கன் மதுரா மிஷனரி ஊழியர்கள் வந்து ஆறுதல் கூறினர். அவ்வூழியர்களின் ஆறுதல் மொழிகளையும் நற்செய்தியையும் கேட்ட லட்சுமணன் கிறிஸ்தவரானார்.
இலட்சுமணனுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண் மகவும் இருந்தனர். இதில் மூன்றாவதாகப் பிறந்த ஆண்குழந்தை 1897 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் பிறந்தது. அக்குழந்தைக்கு பொன்னுசாமி எனப் பெயரிட்டு வளர்த்தனர். அமெரிக்க மதுரா மிஷன் தொடங்கிய தொடக்கப் பள்ளியில் படித்தார். அப்போது கம்பம் பள்ளத்தாக்கில் பணியாற்றிய ஆர்.சி. செல்வநாயகம் போதகரின் இனிமையான போதனையால் கவரப்பட்ட பொன்னுசாமி, அவர் மூலம் திருமுழுக்குப் பெற்றுக் கிறிஸ்தவத்தில் அதிக வாஞ்சையுடன் செயல்பட்டார்.
பொன்னுசாமி வத்தலக்குண்டு போர்டிங் பள்ளியில் உயர் தொடக்கக் கல்வி கற்றார். பின்னர் அமெரிக்க மிஷனரியின் ஆதரவுடன் பசுமலையில் உயர்நிலைக் கல்வியையும், ஆசிரியப் பயிற்சியும் பெற்றார். பின்னர் வத்தலக்குண்டு போர்டிங் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொருப்பேற்று அதைச் சிறந்த பள்ளியாக உருவாக்கினார்.
மொன்னுசாமி அவர்கள் அருள்மணி என்ற அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐந்து ஆண்களும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பசுமலையில் இருந்த ஐக்கிய இறையியல் கல்லூரியில் ( Union Theological Seminary ) 1927 - 30 ஆண்டுகளில் பயின்று L. Th. பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தா பிஷப் இறையியல் கல்லூரியில் ஓராண்டு இறையியல் கற்றார். 1932 ஆம் ஆண்டு குருவானவராக அருள்பொழிவு பெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த கம்பம்- கோகிலாபுரம் குருசேகரத்தில் முதல் ஆயராக நீண்டகாலம் பணி செய்தார். மதுரை- முகவைப் பேராயத்தின் மேற்கு வட்டகைத் தலைவராக 1953 முதல் 1963 வரை எட்டு ஆண்டுகள் தொண்டாற்றினார். அப்போது 34 பள்ளிகளின் தாளாளராகவும் சிறப்புடன் செயல்பட்டார். பேராயத்திலுள்ள இறைமக்களிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
பொன்னுசாமி போதகர் தமிழ், ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், வடமொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். அமெரிக்கன் மதுரா மிஷனரிகளுக்குச் சிறந்த முறையில் தமிழ் கற்றுக் கொடுத்தார்.
சிற்றூர்களில் நோயுற்றோர் வீடுகளுக்குச் சென்று ஜெபித்து ஆறுதல்கூறுவது இவரது வழக்கம். இரவு நேரப் பள்ளிகளையும் நடத்தி வந்தார். பெண்கல்விக்கு முக்கியத்தும் அளித்தார். சபை மக்களுக்கு கும்மிப் பாடல்கள் கற்றுக் கொடுத்தார். கம்பம் பள்ளத்தாக்கில் காலரா, பிளேக் நோய் பரவி இருந்தபோது இவரது வீடு இருபத்தி நான்கு மணிநேர மருத்துவ மனையாகச் செயல்பட்டது. ஒரு சிற்றூரில் கோவில் கட்டுவதற்காகத் தம்மிடம் இருந்த தையல் இயந்திரத்தை விற்றுப் பண உதவி செய்தார். கம்பம் பள்ளத்தாக்கில் கோவில் இல்லாத ஊரே இல்லை எனக்கூறக்கூடிய அளவிற்குக் கோவில்களைக்கட்டினார். இதனால் இவரைக் " கட்டடம் கட்டும் போதகர் " என்றே மக்கள் அழைத்தனர். 1961 ஆம் ஆண்டு வத்தலக்குண்டில் பணிபுரிந்தபோது வத்தலக்குண்டு தூய ஜேம்ஸ் கோவிலை விரிவாக்கம் செய்தார்.
கீர்த்தனைகள்
பொன்னுசாமி போதகர் எழுதிய கீர்த்தனைகளுள் ஐந்து நமது கீர்த்தனை நூலில் இடம்பெற்றுள்ளன. அவை:
1). உமக்கு நிகரானவர் யார்
2). எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
3). காணிக்கை தருவாயே கர்த்தருக்கு
4). கிறிஸ்தவ இல்லறமே- சிறந்திடக் கிருபை செய்வீர்
5). பரம வைத்தியா அருமை இரட்சகனே
1947 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கீர்தனைகள் புதிய பதிப்புக் குழுவில் பொன்னுசாமி போதகரும் இருந்தார். இக்குழுவின் தலைவராக அருள்திரு ஏச். ஏ. பாப்லி இருந்தார். பசுமலை லார்பீர் ஐயருடனும் நண்பராக இருந்தார். லெஸ்லி நியூபிகின் பேராயர் பொன்னுசாமியை " கம்பம் பள்ளத்தாக்கின் பேராயர் " என்று குறிப்பிடுவார்.
பொன்னுசாமி போதகர் இலக்கியவாதி, அருளுரையாளர், நற்செய்தியாளர், மொழிபெயர்ப்பாளர், நிர்வாகி, சிந்தனையாளர், ஆசிரியர், கீர்த்தனைக் கவிஞர் என்று பன்முகத்தன்மை உடையவர்.
இவர் 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் நாள் காலமானார். இவரது உடல் வத்தலக்குண்டு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இயேசுவைப் பாடனும்.
மகிழ்வாய்ப் பாடுங்கள்.
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.
சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன்வீர்ரே,
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர். -

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory