புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மீரான்குளம்

*" என்னிலும் பெரியவர்*  இங்கே வந்துவிட்டார் - *மீரான்குளம் திருச்சபை வரலாறு*

ஆரம்பத்தில் ஆசீர்வாதபுரம் குரு சேகரத்தைச் சேர்ந்தது மீரான்குளம் , நெல்லை மாவட்டத்தில் கர்நாடக நவாபின் ஆட்சி நிலைத்திருந்த நாளில் தோன்றிய குக்கிராமங்களில் ஒன்று மீரான்குளம்.

ஆண்களுக்குப் பனை ஏற்றுத் தொழில் .

ஒரு சிலர் விவசாயத்தையும் பனைத் தொழிலையும் சேர்த்துச் செய்தனர் .

பெண்களின் கைத்தொழில் நூல் நூற்றல் - யாரும் சோம்பித் திரியவில்லை .

எனவே அனைவருக்கும் அமைதியான வாழ்வாக அமைந்திருந்தது .

ஒரே இன மக்களாக இருந்தமையால் ஆண்டுக் கொருமுறை தங்கள் தேவதைக்குக் கொடை கொடுத்து கிடா வெட்டி பக்தியை பரவசத்துடன் பரிமாறியும் கொண்டனர் .

நெல்லை அப்போஸ்தலன் ரேனியசின் நாட்களில் கிறிஸ்து மார்க்கம் நெல்லை நாட்டில் மிகத் தீவிரமாய் பரவியது .

1823 ஐ அடுத்த ஆண்டுகளில் மீரான்குளத்தைச் சுற்றியுள்ள சாத்தான் குளம் , செட்டிகுளம் , நெடுங்குளம் , பனைக்குளம் , பேய்குளம் முதலிய சிற்றூர்களில் கிறிஸ்தவ விதைகள் பலமாக ஊன்றப் பட்டன .

அதன் விளைவாக ஆசீர்வாதபுரம் , அருளுர் ஆகிய கிறிஸ்தவ குடியிருப்புக் கிராமங்கள் தோன்றின .

மீரான்குளம் கிராமம் , பேய்குளம் , ஆழ்வானேரி ஆகிய ஊர்களிலுள்ள ஒருசில பிராமணர்களுக்கு சொந்தமாயிருந்தது .

ஆனால் விளைநிலங்களும் , பனைகளும் உழைக்கும் மக்களுக்குச் சொந்தமாயிருந்தது . எனவே மீரான்குளம் மக்கள் சற்று நிமிர்ந்து நின்றார்கள் .

கொத்தடிமைத்தனம் சற்று குறைவாயிருந்தது .

தென் நெல்லை அப்போஸ்தலன் என்று பெரும் புகழ் பெற்றிருந்த கனம் ஜாண் தாமஸ் ஐயரவர்கள் காலத்தில் ( 1851 - 1870 ) ஆசீர்வாதபுரத்தை மையமாகக் கொண்டு பல கிராமங்கள் கிறிஸ்துவின் ஒளிக்குள் வந்தன.

அதன்பிறகு ஆங்காங்குள்ள நிலச்சுவான்தார்களாலும் , ஜமீன்தார்களாலும் கிறிஸ்தவர்கள் கொடுமைக்குள்ளானார்கள் .

கொடுமைகளை எதிர்த்துப் போராடிய இருவர் இரத்தச் சாட்சிகளாக மரித்தார்கள் .

இந்நிலையிலும் மீரான்குளத்தில் கிறிஸ்தவம் நுழைய வில்லை .

ஏனெனில் அவ்வூர் மக்கள் மிகவும் ஒற்றுமையாயிருந் தார்கள் .

கிறிஸ்தவத்தின் நன்மைகளைக் கண்டறிந்த ஊர்ப் பெரியவர்கள் இவ்விதமாகச் சொன்னார்கள் . "

கிறிஸ்தவர்களானால் ஊர் முழுவதும் அடைக்கக் கிறிஸ்தவர்களாகிவிடுவோம் , இல்லையேல் இந்துக்களாயிருப்போம் . இந்த ஊரில் இரு பிரிவு கூடாது *நற்செய்தித் தொண்டர்களின்* பணி தீவிரமானது .

ஜாண் தாமஸ் ஐயரின் ஊழிய நெருப்பு அறியாமையையும் , அடிமைத் தனத்தையும் சுட்டெரித்தது .

மீரான்குளத்திலும் ஓர் அசைவு ஏற்பட்டது .

மீரான்குளம் பெரியவர் ஒருவர் தங்கள் குலதெய்வத்திற்கு ஆடு வெட்டிப் பொங்கலிடும்படி குடும்பத்தோடு பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தார்.

*கொடை* கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபிறகு , கிடா வெட்டச் சென்றனர் . ஒரே வெட்டில் தலை கீழே விழ வேண்டும் . அருவாளோடு ஆவேசத்தோடு சென்றார் . கட்டிப்போட்டிருந்த கடாவை காணோம் . கயிரை அறுத்துக் கொண்டு ஓடிப்போயிற்று .

அன்று முழுவதும் தேடி அலைந்தும் கிடா கிடைக்கவில்லை . *கடவுள் தோஷம்* என்று கலங்கினர் .

பயந்து நடுங்கி உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டார்கள். சாமியாடும் அந்தச் சாமியார் *' குறி '* சொன்னார் .

*" என்னிலும் பெரியவர்* இங்கே வந்துவிட்டார்.

உனக்கு இனி இங்கு இடமில்லை . நீயும் வேதத்தில் போய் சேர்ந்து விடு என்று சாமியாடியவாறு தீர்க்கதரிசனம் கூறினார்.

அனைத்து மக்களிடமும் தூய ஆவியானவர் கிரியை செய்தார் .

எல்லோரும் ஏகமாகக் கிறிஸ்தவர்களாகத் தீர்மானித்தார்கள் .

மீரான்குளம் மக்கள் சார்பில் நாராயண நாடார் மெஞ்ஞானபுரம் மிஷனரி ஜாண் தாமஸிடம் தூது சென்றார் .

அது 1866 ஆம் ஆண்டின் ஆரம்பம் .

ஜாண் தாமஸ் உள்ளத்திற்குள் மகிழ்ந்தாலும் காலங்கடத்தினார்.

அவர்கள் மேல்சாதி மக்களின் அடாவடித்தனத்தினால் பின் வாங்கிப் போய் விடக்கூடாதே என்றெண்ணி அவர்கள் நன்கு ஆலோசிக்க நாட்களை நீட்டித்தார்.

அவர்களின் பற்றுறுதியைச் சோதிக்கப் பல கேள்விகளைக் கேட்டார்.

மீரான்குளத்தான் ஒரு வார்த்தை சொன்னால் மீறமாட்டான் " என்று அவ்வூர் பெரியவர்கள் உறுதியாகக் கூறினார்கள்.

ஊர்ப் பெயரின் பொருள் நயம் கண்டு - புரிந்து ஜாண் தாமஸ் சிரித்தார்.

அவர்களின் மேலான மனமாற்றம் கண்டு பூரித்தார் .

பெரியவர் நாராயணநாடார் முதன் முதலில் திருமுழுக்குப் பெற்றார்.

பின்பு 35 குடும்பத்தாரும் 160 உறுப்பினர்களும் ஞான தீட்சை பெற்றார்கள்.

சமூக அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு ஆன்மீக எழுச்சி பெற்றார்கள்.

மாசிலாமணி உபதேசியாரும் , அருமைநாயகம் ஐயரும் உடனிருந்து உதவி செய்தார்கள் .

1866 ஏப்ரல் மாதம் - மீரான்குளம் சபை உதயமான நன்னாளாகும்.

தொடர்ந்து தாங்கக்கூடாத துன்பங்களைக் கடந்து ஆவியில் நிலைத்து நின்றார்கள் .

தங்கள் முதிர்வயதில் வேதமாணிக்கம் உபதேசியாரும் , மரியாள் அம்மாளும் மீரான்குளத்தில் தங்கி இருந்து ஊழியம் செய்தார்கள்.

முதலில் ஒரு கோயில் கட்டி அதில் ஆராதனையும் பள்ளிக் கூடமும் ஒழுங்காய் நடத்தினார்கள் .

மூன்று முறை ஓலைக்கோயில் தீக்கிரையானது .

1915 செப்டம்பர் முற்பகுதியில் கனம் மூர் ஐயர் காலத்தில் பெரிய ஆலயம் கட்ட அஸ்திபாரமிடப்பட்டது.

மக்களின் கடுமையான உழைப்பினால் 24 . 2 . 1928 ஆம் ஆண்டில் புதிய அழகு ஆலயம் கட்டப்பட்டது .

மகா கனம் டப்ஸ் பேராயரவர்கள் அர்ப்பணிப்பின் ஆராதனை நடத்திப் பிரதிஷ்டை செய்தார்கள்.

1976 இல் அழகிய கோபுரமும் எழுந்தது.

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory