புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -04

*பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -04*

#Tinnevelly #Historical

சென்னையில் கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் டிவினிட்டி ஸ்கூலில் மூன்று வருஷகாலம் வேதசாஸ்திரம் கற்று , கடைசியில் கேம்பிரிட்ஜ் பரிட்சையில் எல்லா பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறி , கிரேக்க பாஷையில் முதல் வகுப்பிற்கும் மேலான பதவி பெற்று , டிவினிட்டி ஸ்கூல் பிரின்சிபல் கனம் கனோன் கோல்ட் சிமித் ஐயரவர்களிடம் நற்சாட்சி பெற்று 1895 - ம் வருஷம் திருநெல்வேலிக்குத் திரும்பிவந்து , அக்காலத்து ஒழுங்கின்படி திருநெல்வேலி சி . எம் . எஸ் . தேசாந்தரப் பிரசங்கக் கூட்டத்தோடு இரண்டு வருடம் ஊழியம் செய்தார்கள் .

தேசாந்தரப் பிரசங்கக் கூட்டத்தார் ஜில்லாவில் குறிப்பிட்ட ஒர் இடத்தில் தங்கி மாதத்தில் 20 நாட்கள் ஊழியம் செய்வர் .

இந்த இடம் மாதத்துக்கு மாதம் மாறும் . மீதி 10 நாட்கள் விடுமுறை நாட்கள் . அந்தப் பத்து நாட்களையும் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் பின்னிருவார்கள் . ஆகையால் ஐயரவர்கள் தன் குடும்பத்தை வைத்து விட்டுப் போவதற்கு ஒரு இடம் அவசியமாயிற்று.

ஆகையால் கனம் ஐயரவர்கள் பங்களாச்சுரண்டையில் தன் மாமியாரவர்கள் வீட்டிற்கு அருகில் தற்போது கட்டப்பட்டிருக்கிற வீடு இருக்கிற அதே இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடும்பத்தை அதில் வைத்தார்கள் .

வீடு கட்டப்பட்டது 1896ம் வருஷம் . இதுவே குடும்பத்தின் ஆதி வீடா யிற்று . இதில் கிரேஸ் அம்மாளும் , அவர்களுடைய தாயாரும் , சிசுவாயிருந்த அவர்களுடைய இளைய சகோதரனும் வசித்தார்கள் .

ஒரு சமயம் கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் விடுமுறை நாட்களாகிய பத்து நாட்களில் வீட்டுக்கு வந்திருக்கும் போது ஒரு ஓய்வு நாள் ஆராதனையில் அச்சமயம் நடந்தோடித்திரிந்த கனம் ஐயரவர்களுடைய மூத்த மகன் ஆலயத்தில் ஓடிப்போய் நற்கருணைக் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றான் . வீட்டுக்கு வந்தவுடன் ' அவனை இனி மேல் கோவிலுக்குக் கொண்டு வரக்கூடாது ' என்று ஐயரவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதிலிருந்து ஒவ்வொரு ஓய்வு நாளும் அம்மாளவர்கள் அப்போது சிறுமியாயிருந்த தபால் மாசிலாமணியின் மனைவி முத்தம்மாளுக்கு காலணா கொடுத்து பையனை வீட்டில் வைத்துவிட்டுப் போவது வழக்கமாயிற்று.

அதின் பின் சுரண்டையிலிருக்கும் வரைக்கும் பையனை கோவிலுக்குக் கொண்டு போனதில்லை .

கனம் ஐயரவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் . அதற்கு இது ஓர் உதாரணமாகும்.

தேசாந்தரப்பிரசங்கக் கூட்டத்தோடு செய்த வேலை முற்றுப்பெற்றவுடன் கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் 1897 - ம் வருஷம் ஜனுவரி மாதம் 10 - ம் தேதியன்று திருநெல்வேலி அத்தியக்ஷரான மகா கனம் மார்லி அத்தியக்ஷரவர்களால் உதவிக்குருப்பட்டம் பெற்று முதல் முதலாக கோவில்பட்டிக்கு குருவாக நியமிக்கப்பட்டார்கள்.

அப்போது கனம் ஐயர்வர்களுக்கு அளிக்கப்பட்ட ஆங்கில புதிய ஏற்பாடு இன்னமும் பத்திரமாக இருக்கிறது. (இன்று தெரியவில்லை)

அது வரைக்கும் கோவில் பட்டியில் குருவும் கிடையாது , கோவிலும் கிடையாது , பள்ளிக்கூடமும் கிடையாது , குருவானவருக்கு வீடும் கிடையாது , உபாத்தியாயருக்கு வீடும் கிடையாது .

கோவில்பட்டி அப்போது ஒரு சிறிய ஊராக இருந்தது .

ஊருக்கும் ரெயில்வே ஸ்டேஷனுக்கும் அரைமைல் தூரமிருக்கும்.

ஸ்டேஷனுக்கு சமீபத்தில் காவி பூசின ஒரு லோக்கல் பண்டு ஆஸ்பத்திரி மாத்திரம் உண்டு.

பலகாரங்கள் செய்து ரெயில்வே ஸ்டேஷனில் கொண்டு போய் விற்கும் செட்டியார் வீடு ஒன்றும் உண்டு . அந்த வீடு இன்னமும் இருக்கிறது.

இவை தவிர வேறு கட்டடங்கள் ஒன்றும் கிடையாது . ஸ்டேஷனிலிருந்து கண்ணெட்டும் தூரம் வரைக்கும் , அதாவது மலைமேல் கட்டப்பட்டிருக்கும் மில் துரை பங்களா வரைக்கும் ஏக வெளியாயிருந்தது .

ஒரு மரம் கூடக் கிடையாது . மழை பெய்தவுடன் சிவப்பு நிறமான வெல்வெட் பூச்சிகள் நிறைய வரும் .

மில் துரை பங்களா ஒரு இராட்சதனைப் போல் மலை மேல் உட்கார்ந்திருக்கும் .

ஸ்டேஷனுக்கும் ஊருக்கு மிடையில் ரஸ்தாவை ஒட்டி ஒரு பழைய மடம் மாத்திரம் உண்டு . இது இன்றைக்கும் இருக்கிறது . சுற்றிலும் கட்டங்களால் நெருக்கப்பட்டு இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறது .

கனம் ஆல்பர்ட் ஐயரவர் கள் தன் குடும்பத்துடன் ஊருக்குள் ஆறுமுகம் ஆசாரி என்ற ஒர் ஆசாரியார் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார்கள்.

அவ்வீட்டின் ' தலைவாசலுக்கு பழுவான இரட்டைக்கதவு போட்டிருக்கும் .

மிஷன் பள்ளிக்கூடம் ஒரு வாடகைக் கட்டடத்தில் இருந்தது . அதற்கு உபாத்தியாயர் ஸ்ரீ தேவவரம் அவர்கள் .

ஓய்வு நாள் ஆராதனைகள் சாக்ஷியாபுரம் மிஸ் எல்வின் அம்மாளின் பெண் பாடசாலையில் நடைபெற்றன .

பெண் பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஸ்ரீ மாசிலாமணி அவர்கள்.

மிஷன் பள்ளிக்கூடத்தில் ஸ்ரீ தேவ வரம் உபாத்தியாயர் அவர்களிடம் கிரேஸ் அம்மாள் ஆரம்பக்கல்வி கற்றார்கள். அதின் மானவரில் பெரும்பான்மையோர் பையன்கள் .

பெண்கள் மிகச்சிலரே அதில் கிரேஸ் அம்மாள் ஒன்று. பையன்களோடு படித்ததில் தனக்கு இருந்த அசௌகரியங்களை மனதில் கொண்டோ , பையன்களும் , பெண்களும் ஒன்றாகப் படிக்கக்கூடாது என்று அடிக்கடி சொல்லுவார்கள்.

பெற்றோர் யாராகிலும் தங்கள் பெண்களை பையன்களுடைய பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் தடுப்பார்கள்.

அப்பெண்களின் சரீர ஆத்தும் வாழ்வுக்கு அது மிகவும் பிரதி கூலமானது என்பது அவர்களுடைய துணிபு .

இரு திறத்தாரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான சிருஷ்டிகள் தானே . அவர்கள் பிரத்தியேகமான சூழ்நிலையில் வளர வேண்டியது முறையே. சிற்சில சமயங்களில் அம்மாளவர்களுடைய இளைய சகோதரனும் அவர்களுடன் பள்ளிக்கூடத்துக்குப் போவதுண்டு .

ஸ்ரீ தேவவரம் உபாத்தியாயர் அவர்கள் அவளைத்தூக்கி மேசையின் உட்கார வைத்து , விளையாடிக்கொண்டிருப்தற்கு தன்னுடைய கடிகாரத்தைச் சங்கிலியோடு கழற்றிக் கொடுப்பார்கள் . அவன் விளையாடிக் கொண்டிருப்பான் . அம்மாளவர்கள் படித்துக்கொண்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory