புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தெற்கு பாப்பான்குளம் சபை

கல்லிடைக்குறிச்சி சேகரம் தெற்கு பாப்பான்குளம் சபையின் சுருக்கமான வரலாறு (3)

கல்லிடைக்குறிச்சிக்கும் மணிமுத்தாறுக்கும் இடையே அமைந்துள்ள கிராமம் தெற்குபாப்பான்குளம். அம்பாசமுத்திரம் தாலுகாவில் இடைகாலுக்கும் பொட்டல்புதூருக்கும் இடையில் பாப்பான்குளம் என்றொரு பெருங்கிராமம் இருப்பதால் இது தனியே அடையாளம் காணப்படும்படியாக தெற்குபாப்பான்குளம் என்றழைக்கப்படுகிறது. தொடக்ககாலத்தில் அக்காலம் பார்ப்பனர் எனப்பட்ட பிராமண சமூகத்தினர் இங்கு வாழ்ந்ததாலோ அவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலபுலன்களுக்கான குளம் இருந்ததாலோ இப்பெயரை இக்கிராமம் பெற்றுள்ளது. இங்கு மறவர், நாடார், ஆதிதிராவிடர் என மூன்று சமூகத்தினர் வாழ்கின்றனர்.

1890 க்கும் 1898 க்கும் இடையில் நாடார் சமூகத்தில் சுடலைமாடசாமியைக் குலதெய்வமாக வழிபட்ட தர்மராஜ்நாடார் முதன்முதலாக சுவிசேஷமுத்து என்ற அடையாளப்பெயருடன் ஞானஸ்நானம் பெற்றார் அவருக்கு நற்செய்தி கல்லிடைக்குறிச்சி திரு.அ.ஈசாக்கு உபதேசியார் மூலம் சொல்லப்பட்டிருந்தது. கல்லிடை மேல்முகம்நாடார்தெரு கிறிஸ்தவர்கள் பதநீர் சீசன் காலங்களில் தெற்குபாப்பான்குளம் கிராமத்தின் தென்புறம் அடர்த்தியாக இருந்த பனைமரக்காடுகளில் தங்கியிருந்து பனையேற்றுத்தொழில் செய்வார்கள் அவர்களுக்காக ஆராதனை நடத்த ஈசாக்கு உபதேசியார் நடந்தவாரே தெற்குபாப்பான்குளம் நாடார் தெருவைக் கடந்து அங்கு செல்வது வழக்கமாயிருந்தது. அந்நேரம் நாடார் தெருவின்முக்கியஸ்தராக இருந்த தர்மராஜ் நாடாருக்கும் ஈசாக்கு உபதேசியாருக்கும் நல்ல அறிமுகம் ஏற்பட்டது.

தர்மராஜ்நாடார் கல்லிடை மேல்முகம்நாடார் தெருவைச்சேர்ந்தவர்.
சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அழைப்பின்பேரில் பனையேற்றுத்தொழில் செய்ய ஜமீன் எல்கைக்குட்பட்ட தெற்குபாப்பான்குளத்தில் குடியேறியிருந்தார் அவருக்கு மாடத்தி எனும் மூத்தமகளும் வெள்ளையாநாடார் எனும் மகன் உட்பட 7 ஆண்குழந்தைகள் அதில் கடைசிமகன் முத்துக்கண்நாடார்.
மருதகுளத்தைச் சேர்ந்த ஈசாக்கு உபதேசியார் 1873 ல் கல்லிடை சபைஊழியராகப் பொறுப்பேற்றவர்.
கனம்.சார்லஸ் ரேனியஸ் ஐயரவர்கள் தலைமையிலானடோனாவூர் மிஷனரிகள் உபதேசியார்கள் கல்லிடை மேல்முகம்நாடார் தெருவில் 1849,1850 ல் செய்த சுவிசேஷத்தை ஏற்று சுவிசேஷமுத்து என ஞானஸ்நானம் பெற்ற இ.அய்யம்பெருமாள்நாடாரின் மூத்தமகள் ஞானவடிவுவைத் திருமணம் செய்திருந்தார் மனைவிவழியில் தர்மராஜ் நெருங்கியஉறவினர்(தொடரும்)
*கல்லிடைக்குறிச்சி சேகரம் தெற்குபாப்பான்குளம் சபை சுருக்கமான வரலாறு (4)*

தெற்குபாப்பான்குளம் தர்மராஜ் நாடார் கல்லிடைக்குறிச்சி அ.ஈசாக்கு உபதேசியார் மூலம் நற்செய்தியை அறிந்து வரும் வேளையில் அவரது மகன் வெள்ளையாநாடாருக்கு துவரைக்குளம் கிராமத்திலிருந்து பெண் சம்பந்தம் வந்தது. தர்மராஜ்நாடார் தம் மூத்தமகள் மாடத்தியை துவரைக்குளத்திலேயே திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த மாடத்தி நல்லஉயரமுடையவராக இருந்ததால் குடும்பத்தாரால் நெட்டைமாடத்தி என்றழைக்கப்பட்டார். அவரது கணவரும் நல்லஉயரமும் பெரியஉடல்கட்டமைப்பும் கொண்டவராக இருந்தார். நேரடிக்களஆய்வில் கிடைத்த பாரம்பரிய செவிவழிச்செய்தியில் துவரைக்குளம் கிராமத்தோடு தங்களுக்கு ஆதிகாலஉறவு இருந்ததாகவும் அங்கிருந்து 9 பேர் கல்லிடைக்குறிச்சி வந்ததாகவும் அதில் ஒருவர் பாப்பாங்குளத்திற்கும் மற்றொருவர் சிங்கம்பட்டிக்கும் சென்றதாக தாம் செவிவழிச்செய்தியாக அறிந்ததாக 78 வயதான நிலையில் அங்கு வசிக்கும் திரு.சுப்பையாநாடார் என்ற ஆபிரகாம் சுந்தர்ராஜ் குறிப்பிடுககிறார். 2004 ல் நேரடிக்களஆய்வின்போது தெற்குபாப்பான்குளம் நாடார் சமூக முதல் கிறிஸ்தவரான சுவிசேஷமுத்து தர்மராஜ்நாடாரின் கடைசி மகன் முத்துக்கண்நாடார் வழி பேரன் திரு.மு.தர்மக்கண் நாடார் அவர்கள் உயிரோடிருந்தார்கள் அவர் கல்லிடைக்குறிச்சி மேல்முகம்நாடார் தெருவில் வசித்த தம் தாத்தாவை சிங்கம்பட்டி ஜமீன்தார் அடர்த்தியான பனைமரங்கள் மிகுந்து காணப்பட்ட தம் ஜமீன் எல்கைக்குட்பட்ட தெற்குபாப்பான்குளத்தில் குடியேறி பனையேற்றுத்தொழில் செய்ய அழைப்புவிடுத்ததாகவும் அதன்படி தெற்குபாப்பான்குளம் வந்து குடியேறியதாகவும் அவர் வந்தவுடன் தாம் குலதெய்வமாக வழிபட்டுவந்த சுடலைமாடசாமிக்கு தெற்குபாப்பான்குளத்தில் கோயில் அமைத்து வழிபட்டதாகவும் கல்லிடைக்குறிச்சி அ.ஈசாக்கு உபதேசியார் மூலம் நற்செய்தியை ஏற்று தம் பெரியப்பா வெள்ளையாநாடார் திருமணத்தையொட்டி சுவிசேஷமுத்து என்ற அடையாளப்பெயருடன் தம் தாத்தா ஞானஸ்நானம் பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர் கல்லிடைக்குறிச்சி தேவாலயப் பிரதிஷ்டை (01.03.1910) வரை தம் முன்னோர் ஞாயிறுதோறும் கல்லிடைக்குறிச்சி சென்று ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார்கள் ( *அக்காலக் கல்லிடை தேவாலயம்* கனம்.சார்லஸ் ரேனியஸ் ஐயரவர்கள் காலத்தில் மேல்முகம்நாடார் தெருவில் 1850 ல் இ.அய்யம்பெருமாள்நாடார் கிறிஸ்தவத்தை ஏற்று சுவிசேஷமுத்து என ஞானஸ்நானம் பெற்றகாலத்திற்குப்பின் மேல்முகம் நாடார் தெருவின் மையப்பகுதியில் CMS மிஷன் சார்பில் இடம் வாங்கப்பட்டு அதில் இருபனைமரங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு நோக்கி வாசலைக்கொண்டு கிழமேலாக தேவாலயம் கூரைக்கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்தது. அதன் முன் CMS மிஷன் சார்பில் கிணறு வெட்டப்பட்டிருந்தது (இதுவே மேல்முகம் நாடார் தெருவின் முதல் கிணறு) தேவாலயமே CMS தொடக்கப்பள்ளியாகவும் செயல்பட்டு வந்தது)
தெற்குபாப்பான்குளம் திரு.மு.தர்மக்கண்நாடாரின் கடைசிமகன் த.ஐசக் குமார் தந்த நேரடிப்பேட்டியில் தம் முன்னோர் கிறிஸ்தவத்தை ஏற்றபின் வழிபாடு செய்யப்படாமல் காணப்பட்ட சுடலைமாடசாமி கோவிலை தெற்குபாப்பான்குளம் மறவர் சமூகத்தினர் தம் ஆளுகையில் கொண்டுவந்து குலதெய்வமாக வழிபட்டுவருவதாகக் கூறினார்.
கிறிஸ்தவத்தை ஏற்றபோது தமது முன்னோர் அநேக துன்பங்களைச் சந்தித்ததாகவும் சுவிசேஷமுத்து நாடாரின் 7 ஆண்பிள்ளைகளில் வெள்ளையா, முத்துக்கண் தவிர்த்து இதர ஐந்து ஆண்பிள்ளைகள் மரித்ததாகவும் இருவரும் குறிப்பிட்டதோடு தேவாலயம் கட்ட சிங்கம்பட்டி ஜமீன்தார் தடைவிதித்ததையும் குறிப்பிட்டார்கள். "எனது ஜமீன் எல்கைக்குள் வேதக்கோவில் வரக்கூடாது" என உறுதியேற்ற சிங்கம்பட்டி ஜமீன்தார் தம் ஆட்கள் மூலம் அஸ்திபாரம் போட்டநிலையில் இருந்த தேவாலயப்பணியைத் தடுத்து நிறுத்தியபோது அக்காலத்தில் சமயசகாயராக பேருதவி செய்தவர் கல்லிடைக்குறிச்சி திருச்சபையின் தந்தை எனப்புகழப்படும் கார்மிஷனரி என அன்போடு அழைக்கப்படும் Rev.E.S.கார் ஐயரவர்கள் ஆவார்.(தொடரும்)


ல்லிடைக்குறிச்சி சேகரம் தெற்குபாப்பான்குளம் சபை சுருக்கமான வரலாறு- 5

கார் மிஷனரி என அன்போடு அழைக்கப்படும் Rev.E.S.கார் (எட்மண்ட் ஸ்டைல்மன் கார்) ஐயரவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவர்கள்.
அக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் CMS மிஷனரி ஊழியங்களைத் (Low Church Order) தாங்கும் ஜெபக்குழுவும்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் SPG மிஷனரி ஊழியங்களைத் (High Church Order) தாங்கும் ஜெபக்குழுவும் இயங்கிவந்தன.
1887 ல் CMS மிஷனரியாக வந்த கார் வந்தவுடன் சார்ஜென்ற் பேராயருக்கு பெரும் உதவியாகச் செயல்பட்டார் நற்போதக ஆசிரியராகப் பபணி செய்தார் 1887 - 1915 வரை நெல்லைத் திருமண்டலத்தில் பணி செய்த அவர் விருப்பஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். CMS Superintending Missionary ஆக திருநெல்வேலி திருமண்டலமெங்கும் பணிசெய்த அவர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களுக்குப்பின் தென்மேற்கு நெல்லை,
மேல்நெல்லை சபைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கவனித்தவர். குறிப்பாக கல்லிடைக்குறிச்சி சபையை நேசித்தவர் அடிக்கடி கல்லிடைக்குறிச்சி சபைக்கு நேரில் வந்து சென்றவர். அக்காலம் தெற்குபாப்பான்குளம் சபையார் ஞாயிறுஆராதனைக்கு கல்லிடைக்குறிச்சி வந்து சென்றதால் அவர்களோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திய கார் ஐயரவர்கள் அவ்வூரின் முதல்கிறிஸ்தவரான சுவிசேஷமுத்துவின் கடைசிமகன் முத்துக்கண்நாடாரின் வீட்டையொட்டி வடபுறம் இருந்த அவரது காலிஇடத்தை வாங்கினார். கார் மிஷனரி அவர்களால் 02.02.1911 அன்று தெற்குபாப்பான்குளம் தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இதை கேள்விப்பட்ட சிங்கம்பட்டி ஜமீன்தார் தமது ஆட்களை அனுப்பி கட்டுமானப்பணிகளைத் ததடைசெய்தார் (தொடரும்)
(ஜா.ஜான்ஞானராஜ்)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory